Last Updated : 07 Mar, 2019 10:35 AM

 

Published : 07 Mar 2019 10:35 AM
Last Updated : 07 Mar 2019 10:35 AM

பிரிந்த கட்சியால் விருதுநகரில் சரியும் அதிமுக வாக்குகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு க்குப் பிறகு அதிமுக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., வசம் சென் றதும், சசிகலாவை பொதுச் செயலாளராகக் கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அதிமுகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அவர் அணியில் சேர்ந்தனர். இவர்களில் ஒருவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எதிர்கோட்டை சுப்பிரமணியன்.

கடந்த மக்க ளவைத் தேர்தலில் ஆர்.பி. உதயகுமார் கட்டிக்காத்து அதிமுகவின் கோட்டையாக விளங்கிய சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தற்போது அக்கட்சியால் கைவிடப்பட்ட தொகுதியாகிவிட்டது என்றும், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஆர்.பி. உதயகுமார் சாத்தூர் தொகுதியைவிட்டு வெளியேறி திருமங்கலத்தில் போட்டியிட்டதும், அதிமுகவில் இருந்து அதிக வாக்குகள் பெற்ற எதிர்கோட்டை சுப்பிரமணியன் அமமுகவுக்குச் சென்றதுமே இதற்குக் காரணம் என்று கூறுகிறார்கள் அக்கட்சியினர்.

மேலும் சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாவட்ட செயலரும் பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனக்கு வேண்டியவரை சாத்தூர் தொகுதியில் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், சாத்தூரில் பல ஆண்டுகளாகக் கட்சிப் பணியாற்றி வரும் நிர்வாகிகள் ஓரம் கட்டப்பட்டுள்ளதால் இம்முறை சாத்தூர் தொகுதியில் எளிதாக வாக்குகளைப்பெற அதிமுகவுக்கு வழியில்லை என்றும் கூறுகிறார்கள் அக்கட்சியின் அதிருப்தியாளர்கள்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கான வாக்கு வங்கியைப் பிரித்து கணிசமான வாக்குகளைப்பெற அமமுக மாவட்டச் செயலர்களான எதிர்கோட்டை சுப்பிரமணியனும், இன்பத்தமிழனும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வாக்குகள் சரிய வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x