Published : 01 Mar 2019 09:40 AM
Last Updated : 01 Mar 2019 09:40 AM
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு இணையாகப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகிறது பாஜக. ‘எனது குடும்பம் பாஜக குடும்பம்’ என்று வீடுதோறும் சொல்லவைக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் மக்களையே சந்திக்காத தலைவர்களே அதிகம் என்று விமர்சிக்கப்பட்ட நேரத்தில், அதுவும் தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் எந்தளவுக்குத் தயாராக இருக்கிறது? அவருடன் பேசினேன்.
இந்தத் தேர்தலை ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலாக மட்டுமே பார்க்கிறதா காங்கிரஸ்?
இல்லை. இந்தியாவின் அரசியல் சட்டம் சொல்கிற ‘மதச்சார்பற்ற குடியர’சை மீண்டும் அமைப்பதற்கான தேர்தலாகவே இதைப் பார்க்கிறோம். மக்களை சாதி, மதரீதியாகப் பிரித்து அதன் மூலமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பும் கூட்டணி அல்ல எங்கள் கூட்டணி. மக்களை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்று கருதும் கூட்டணி இது.
ஆனால், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் என்ன பெரிய கொள்கை வேறுபாடு இருக்கிறது?
நிறைய உண்டு. தாராளமயமாக்கலை நடைமுறைப்படுத்துவதில் எங்களுக்கும் பாஜகவுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஜிஎஸ்டியில் ஒரே வரி விதிப்பு முறை இருக்க வேண்டும், 18%-க்கு மேல் வரி கூடாது என்று நாங்கள் சொன்னோம். அவர்களோ, 28% வரையில் வரி போட்டார்கள். பணமதிப்பு நீக்கம் தவறு என்று நாங்கள் சொன்னோம். “இந்த நடவடிக்கையால் இந்தியாவின் ஜிடிபி குறையும்” என்று மன்மோகன்சிங் சொன்னார். இப்போது அதுதான் நடந்திருக்கிறது. நாங்கள் தேச ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள். அவர்களோ, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற பாதையில் செல்பவர்கள்.
மாநில சுயாட்சி, நீட் தேர்வு, எழுவர் விடுதலையில் உங்கள் நிலைப்பாடு என்ன?
மாநிலங்கள்தான் இந்தியாவின் பலம் என்பதை முன்னைக்காட்டிலும் இப்போது அதிகமாக காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது. நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க நாங்கள் தயார். எழுவர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றமும் அரசும் எடுக்கிற முடிவை எதிர்க்க மாட்டோம். மேல் முறையீடு செய்ய மாட்டோம்!
“காங்கிரஸ் எம்பிக்களைப் பார்த்தால், ஏன் மாநிலங்களவையைச் செயல்பட விடாமல் தடுத்தீர்கள் என்று கேளுங்கள்” என இளைஞர்கள் மத்தியில் மோடி பேசியிருக்கிறாரே?
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இவர்கள் எப்படியெல்லாம் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள் என்று நாட்டுக்கே தெரியும். நாடாளுமன்றத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஒரே பிரதமர் மோடிதான். நாடாளுமன்ற விவாதங்களில் அவர் பங்கேற்பதும் கிடையாது, வந்து அமர்வதும் கிடையாது. மன்மோகன்சிங் பிரதமராக இருக்கும்போது, கடுமையான வேலை நெருக்கடி என்றால் கோப்புகளுடன் அவைக்கு வந்துவிடுவார். கோப்புகளையும் பார்ப்பார், முக்கியமான விவாதங்களையும் கவனிப்பார். நாடாளுமன்றத்தை முற்றிலுமாகப் புறக்கணித்த பிரதமர், தேர்தலில் வாக்குக் கேட்டு வருகிறபோது, இந்தக் கேள்வியை அவரிடம் மக்கள் நிச்சயம் கேட்பார்கள்!
அதிமுகவே பாஜகவுக்கு 5 சீட்தான் கொடுத்திருக்கிறது. நீங்கள் திமுகவிடம் 10 வாங்கியிருக்கிறீர்களே, வெல்வீர்களா?
பரஸ்பரம் வாக்குகளைப் பரிமாறிக்கொண்டு, வெற்றிக்கு உதவுவதுதான் கூட்டணியின் தத்துவம். இந்த முறை எங்களுக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. 10 அல்ல, 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெல்வோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT