Published : 22 Mar 2019 09:29 AM
Last Updated : 22 Mar 2019 09:29 AM
ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளதால், திமுக வினர் அதிருப்தியடைந்துள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு, ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சார்பில் கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை மதிமுக இழந்துள்ளதால், அக்கட்சியின் சின்னமான பம்பரம் பறிபோய் உள்ளது.
இந்நிலையில், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என ஈரோடு மாவட்ட திமுக வினர் தெரிவித்து வருகின் றனர். இந்த கருத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், அக்கட்சியின் பொருளாளரும், வேட்பாளருமான கணேசமூர்த்தியும் ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சுயேச்சை சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ நேற்று தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் மனம் மாறி, உதயசூரியனில் போட்டியிட வைகோ ஒப்புக்கொள்வார் என எதிர்பார்த்து இருந்த ஈரோடு மாவட்ட திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘மக்களவைத் தேர்தல் வேட்புமனு திரும்பபெறும் நாளன்று (மார்ச் 29-ம்தேதி) சுயேச்சை வேட்பாளருக்கு எந்த சின்னம் என்பது உறுதி செய்யப்படும். ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 19 நாட்கள் இடைவெளியில், 14 லட்சம் வாக்காளர்களிடம் சுயேச்சை சின்னத்தை எப்படிக் கொண்டு செல்ல முடியும்? இதுதவிர, வேட்பாளர் குறித்த குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரே பெயரில் ‘டம்மி’ யாக சில வேட்பாளர்களை நிறுத்தி வாக்காளர்களைக் குழப்பும் நடைமுறையும் இருந்து வருகிறது. ஆளுங்கட்சி இதனைப் பயன்படுத்தி, கணேசமூர்த்தி என்ற பெயரில் சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தினால், வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு வாக்குகள் பெரும்பான்மையாக சிதறி விடும். இதுபோன்ற காரணங்களாலேயே அனைவருக்கும் அறிமுகமான உதயசூரியன் சின்னத்தில் நிற்க வலியுறுத்துகிறோம்’ என்றனர்.
மதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘மதிமுக தொடங்கியபோது குடை சின்னத்தில் போட்டியிட்டோம். அதன்பின்னர் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். இந்த இரு சின்னங்களிலும் மதிமுக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகள், வாங்கிய வாக்குகள் போன்ற கடந்த கால ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து, எங்களுக்கு பம்பரம் அல்லது குடை சின்னம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்கவுள்ளோம். மேலும், மக்களவைத் தொகுதியில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மதிமுக போட்டியிடுவதால், மற்ற தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு இந்த சின்னத்தை ஒதுக்குவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் தெரிவிக்கவுள்ளோம். எனவே, சுயேச்சை சின்னங்களான பம்பரம் அல்லது குடை ஈரோடு வேட்பாளருக்கு எளிதில் கிடைத்து விடும். இந்த இரு சின்னங்களையும் எளிதில் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT