Published : 19 Mar 2019 12:33 PM
Last Updated : 19 Mar 2019 12:33 PM
மக்கள் நீதி மய்யத்தின் பலத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள். மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள், யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பது தெரியத்தான் போகிறது என்று கோவை சரளா தெரிவித்தார்.
நடிகை கோவை சரளா சென்னையில் இன்று தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
''நான் பதவிக்கு ஆசைப்பட்டோ பணத்துக்கு ஆசைப்பட்டோ மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரவில்லை. எல்லோருக்கும் அங்கே சரிசம நிலைதான் இருக்கிறது. வேட்பாளர் நேர்காணலில் என்னையும் உட்காரச் சொன்னார்கள். மற்றவர்களையும் உட்காரச் சொன்னார்கள்.
அதுமட்டுமில்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களையும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களையும் நேர்காணலின் போது உட்காரச் சொன்னார்கள். அப்படித்தான் உட்கார்ந்திருந்தார்கள். பல தரப்புக் கருத்துகளின் அடிப்படையில் வேட்பாளரைத் தேர்வு செய்யவேண்டும் என கட்சித்தலைவர் நினைப்பதில் தவறொன்றுமில்லையே. கட்சியில் சேரவேண்டும், தேர்தலில் போட்டியிடவேண்டும், பதவி கிடைக்க வேண்டும் என்றெல்லாம் நான் அரசியலுக்கு வரவில்லை.
சினிமாவில் வாய்ப்பு இல்லை எனும் சூழலில், நடிகர்கள் அரசியலுக்கு வருவதாகச் சொல்லுகிறீர்கள். அரசியல் குறித்த தெளிவும் ஞானமும் உலக அறிவும் முக்கியம். எம்ஜிஆர், எந்த வயதில் கட்சியைத் தொடங்கினார் என்பது எல்லோருக்குமே தெரியும்.
திமுக தலைவர் கருணாநிதியும் அதிமுக தலைவர் ஜெயலலிதாவும் இல்லையென்பதால், சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருகிறார்களா, கமல் அரசியலுக்கு வந்திருக்கிறாரா என்று கேட்கிறீர்கள். இது அப்படியில்லை. அவர்கள் மக்களின் மனநிலையை அறிந்து, செயல்பட்டார்கள். இவருக்கு அவர் பயந்தார். அவருக்கு இவர் பயந்தார். அப்படித்தான் பார்த்துப்பார்த்து செயல்பட்டார்கள். ஆனால் இங்கே, இப்போது, தடி எடுத்தவர்கள் எல்லோரும் தண்டல் காரர்களாகிவிட்டார்கள்.
அதனால்தான் ‘உன் குடுமி என் கையில்’ என்று இன்னொருவர் வந்து, ஆட்டிப் படைக்கிறார். இந்த நிலையெல்லாம் மாறவேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் விருப்பம்.
இப்போது 25 வருடங்களுக்கும் மேலாக என் முகம் தெரியும் உங்களுக்கு. என் வாழ்க்கையே உங்களுடன் அமைந்திருக்கிறது. இதைத்தாண்டி என் குண இயல்புகள் அறிந்திருக்கிறீர்கள். அப்படி இல்லாத பட்சத்தில், என்னைத் தெரிந்துகொள்வதற்கே பத்து வருடங்களாகிவிடும்.
சினிமாக்காரர்கள் சேர்ந்திருக்கும் கட்சி என்று நினைக்காதீர்கள். சினிமாக்காரர்கள் மட்டுமின்றி நல்லறிஞர்களும் சேவையுடன் செயலாற்றுபவர்களும் கூட இணைந்திருக்கிறார்கள்.
இந்தக் கட்சிக்குப் போனால் விமர்சிக்கிறீர்கள். அந்தக் கட்சிக்குப் போனாலும் விமர்சிக்கிறீர்கள். எந்தக் கட்சியும் வேண்டாம் என்று தனித்திருந்தால், ‘இவங்களாவது ஜெயிக்கிறதாவது’ என்கிறீர்கள். மக்கள் நீதி மய்யத்தின் பலத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள். மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள், யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பது தெரியத்தான் போகிறது''.
இவ்வாறு கோவை சரளா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT