Published : 07 Mar 2019 06:49 AM
Last Updated : 07 Mar 2019 06:49 AM

கூட்டணி குறித்து அதிமுக, திமுக கட்சிகளுடன் ஒரே நேரத்தில் பேச்சு நடத்திய தேமுதிக: தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு 

ஒரே நாளில், ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுகவுடன் வெளிப்படையாக தேமுதிக கூட்டணி பேச்சு நடத்தியதால் தமிழக அரசியலில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுக, பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மக்களவைத் தேர்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பது கடந்த சில வாரங்களாகவே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. திமுக, அதிமுக என 2 கூட்டணிகளையும் சேர்ந்த தலைவர்கள் இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிவந்தனர். இதனால் தேமுதிகவுக்கு திடீர் மவுசு ஏற்பட்டது. பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதுபோல 7 தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் தர வேண்டும் என தேமுதிக பிடிவாதம் பிடித்ததால் அதிமுக தேமுதிக இடையே எந்த உடன்பாடும் ஏற்பட வில்லை. இருப்பினும் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகி யோர் தேமுதிக பொருளாளர் பிரேம லதா, துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரிடம் தொடர்ந்து பேசி வந்தனர். அதுபோல திமுகவிடமும் தேமுதிக பேசி வந்தது.

ஆனால், நேற்று முன்தினம் திமுக தனது தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்தது. இதனால் அதிமுக கூட்டணியில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை தேமுதிகவுக்கு ஏற்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்கும் சென்னை பொதுக்கூட்டத்துக்கு முன்பு தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும் என அதிமுக, பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.

ஆனால், நேற்று முன்தினம் நடை பெற்ற தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை.

இந்நிலையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நேற்று பிற்பகல் 3 மணியள வில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினார். அதே நேரத்தில் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், நிர்வாகி இளங்கோவன் ஆகியோர் திமுக பொருளாளர் துரைமுருகனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். ஒரே நாளில், ஒரே நேரத்தில் அதிமுக, திமுக வுடன் தேமுதிக கூட்டணி பேசியதால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட் டது. இந்தத் தகவல் அறிந்ததும் அதிர்ச்சி யடைந்த அதிமுக, பாஜக தலைவர்கள், மோடியின் பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் படத்தை அகற்றினர்.

திமுக கைவிரிப்பு

தேமுதிக நிர்வாகிகள் தன்னை சந்தித்த தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணிக்கு வர விரும்புகிறோம். தேமுதிகவுக்கு தொகுதி கள் ஒதுக்க வேண்டும் என்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இல்லை. கூட்டணி கட்சிகளுடன் தொகு திப் பங்கீட்டை முடித்து விட்டோம். கொடுப்பதற்கு தொகுதிகள் இல்லை. மன்னிக்கவும் எனக் கூறிவிட்டேன்.

சுதீஷ் பேசி முடித்ததும் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், நிர்வாகி இளங்கோவன் ஆகியோர் என்னை சந்தித்தனர். திமுகவிடம் கொடுப்ப தற்கு தொகுதிகள் இல்லை. இப்போது வந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். அப்போது முன் னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், திமுக எம்எல்ஏ ராணிப்பேட்டை காந்தி ஆகியோர் உடனிருந்தனர். தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் விவாதிப்பேன். தொகுதி இருந்தால்தானே தேமுதிகவுக்கு கொடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுதீஷ் விளக்கம்

பியூஷ் கோயலை சந்தித்த பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய எல்.கே.சுதீஷ், ‘‘பியூஷ் கோயல் கேட்டுக் கொண்ட படி அவரை சந்தித்துப் பேசினேன். கூட்டணி, தொகுதி எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரிவாக பேசினோம். பிரதமர் மோடி சென்னை வந்துள்ளதால் பேச்சுவார்த்தைக்கு நேரம் குறைவாக இருந்தது. அதனால், முழுவதுமாக பேச முடியவில்லை. மீண்டும் நாங்கள் பேசவுள்ளோம். நாங்கள் முன்பிருந்தே பாஜகவுடன்தான் கூட்டணி என்றே கூறி வந்தோம். தமிழகத்தை பொருத்தவரையில் அதிமுக வின் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டுமென பாஜக கூறியது. அதன்பிறகு, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வந்து பேசினர். ஆனால், எங்களுக்கு முன்பே பாமகவுக்கு தொகுதிகள் கொடுத்து விட்டனர்.

2014-ல் நடந்ததுபோல், கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினோம். அது நடக்காததால், அதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்தோம். அப்போது எங்களுக்கு திமுகவில் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான். அப்போது நான் துரைமுருகனிடம் பேசியது உண்மைதான். தேமுதிக பலம் என்னவென்று எங் களுக்கு தெரியும். எங்கள் கட்சிக்கான தொகுதிகளை கேட்டு வருகிறோம். பாஜக வுடன் எங்களது கூட்டணியில் இழுபறி இல்லை. ஓரிரு நாட்களில் முடிவாகிவிடும். பிரதமர் மோடி இன்னும் 5 முறையாவது தமிழகம் வருவார். அப்போது அந்த கூட் டங்களில் நாங்கள் கலந்து கொள்வோம்'' என்றார்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் அதிமுக, திமுகவுடன் தேமுதிக வெளிப்படை யாகவே கூட்டணி பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. இதனால் அதிமுக, பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x