Published : 25 Mar 2019 07:53 AM
Last Updated : 25 Mar 2019 07:53 AM
பாஜகவின் கடுமையான வியூகத்தால் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது சொந்த நிலமான வங்கத்தில் சவால்களைச் சந்தித்துவருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி, புல்வாமா தாக்குதல், வங்கத்தில் பாஜக மேற்கொண்டுவரும் தீவிரமான பிரச்சாரம் குறித்துப் பேசுகிறார் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ’பிரையன்.
இந்தத் தேர்தலை ‘பாஜக – மற்றவர்கள்’ என்று எதிர்க்கட்சிகள் சுருக்கிவிட்டன; இது பாஜகவுக்கு உதவுமா?
எதிர்க்கட்சிகள் அப்படி மாற்றவில்லை; அப்படி நம்பவைக்க பாஜக விரும்புகிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவேன், விவசாயத்தை மீட்பேன் என்றெல்லாம் தந்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றினாரா? பணமதிப்புநீக்க நடவடிக்கையை எடுத்தீர்களே, உங்களுடைய லட்சியம் நிறைவேறியதா என்று மோடியைக் கேட்க வேண்டும். உண்மையான பிரச்சினைகளுக்கு அதனிடம் பதில்கள் இல்லை என்பதால் தேர்தலை கோஷங்களாகவும் கவர்ச்சிகரமான விளம்பர வாசகங்களாகவும் மாற்றவே பாஜக விரும்புகிறது.
புல்வாமா தாக்குதல், பலாகோட் துல்லியத் தாக்குதல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
வேலைவாய்ப்பு, பணமதிப்புநீக்கத்தால் ஏற்பட்ட பேரிழப்பு, பொதுச் சரக்கு, சேவை வரி அமலால் ஏற்பட்ட இழப்பு, பொருளாதாரப் பின்னடைவு ஆகியவற்றைப் பிரச்சினைகளாக்க பாஜக விரும்பவில்லை. தேசியவாதம், தேசபக்தி உணர்வுகளைக் கிளப்பிவிட்டுத் திசைதிருப்பப் பார்க்கிறது.
உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை ஈடுகட்ட, வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தீவிரமாகச் செயல்படுகிறதே?
பாஜக பிரச்சாரம் மூலம் பிரமையை ஏற்படுத்தப் பார்க்கிறது. வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை வகித்துவந்த எதிர்க்கட்சிகளுக்கான இடம் வெற்றிடமாகிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனவே, பாஜக அந்த இடத்தைப் பிடிக்க இலக்கு வைத்துச் செயல்படுகிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு அது மாற்று ஆக முடியாது. வேட்பாளர்களுக்குக் கூடத் தகுதியான ஆட்கள் இல்லாமல் திரிணமூலிலிருந்து ஆள் பிடிக்கிறது. அதன் பிரச்சாரப் பாடல்கூட 55 முறை எங்களுடைய கட்சிப் பெயரையும் 5 முறை எங்களுடைய முதலமைச்சர் பெயரையும் சொல்கிறது. வங்கத்தில் நாங்கள்தான் முக்கியம் என்பதை இதன் மூலம் அங்கீகரிக்கிறது.
திரிணமூல் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சமீபகாலமாக வெளியேறுகிறார்களே... இது உங்களைப் பாதிக்காதா?
எங்களிடம் 224 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர், அவர்களில் ஒருவர்தான் வெளியேறியிருக்கிறார். 47 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2 பேர் விலக்கப்பட்டுவிட்டனர். அவர்கள்தான் மீண்டும் போட்டியிடும் வாய்ப்புக்காக அங்கு போய்ச் சேர்ந்துள்ளனர்.
பாஜகவை சமாளிப்பதற்காக இடதுசாரிகளுக்கு உதவ திரிணமூல் முயல்கிறது என்ற பேச்சு அடிபடுகிறதே?
இடதுசாரிகளின் ஆட்சியில் 45,000 தொண்டர் களை இழந்திருக்கிறோம். இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலில் பாஜக, இடதுசாரிகள், காங்கிரஸ் என்று மூன்று தரப்பையுமே நாங்கள் எதிர்கொள்கிறோம். ஒரு தீய சக்தியையும் அந்தத் தீய சக்தியை அழிக்கக்கூடிய நல்ல பெண்மணியையும்தான் வங்காள வாக்காளர்கள் களத்தில் பார்க்கிறார்கள்.
2019 தேர்தல் தேசியப் பிரச்சினைகளுக்காக மட்டுமா? மாநிலக் கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறதா?
இது மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுடைய கூட்டுத் தொகையாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கட்சி பாஜகவை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகம், பஞ்சாபில் எதிர்க்கும். நாங்கள் வங்கத்தில் எதிர்ப்போம். தமிழ்நாட்டில் திமுக எதிர்க்கும். இப்படித்தான் இந்தத் தேர்தல் நடக்கிறது.
- ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT