Published : 27 Mar 2019 08:18 AM
Last Updated : 27 Mar 2019 08:18 AM
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் நினைவுக்கு வரும் தவிர்க்க முடியாத ஆளுமை டி.என்.சேஷன். இந்திய ஜனநாயகம் தேர்தலை அடிப்படையாகக் கொண்டது என்பதால் தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே இந்திய அரசமைப்புச் சட்டம், தேர்தல் ஆணையத்துக்குத் தனித்தியங்கும் அதிகாரத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. எழுத்தில் இருந்த அதிகாரத்தையும் பொறுப்பையும் செயல்படுத்துவதற்கு இந்தியா ஏறக்குறைய 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
டிசம்பர் 1990-ல் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் டி.என்.சேஷன். ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத் துறை செயலராக இருந்து, அமைச்சரவை செயலராகப் பதவி உயர்வு பெற்றவர். போபர்ஸ் பீரங்கி ஊழலைக் கடுமையாக விமர்சித்த
வி.பி.சிங் அடுத்து பிரதமரானார். ராஜீவ் காலத்தில் பாதுகாப்புத் துறையில் செயலராக இருந்தவர் என்பதால், சேஷனைத் திட்டக் குழு உறுப்பினராகப் பதவியிறக்கம் செய்தார் வி.பி.சிங். அவரையடுத்து சந்திரசேகர் பிரதமராகப் பதவியேற்றபோதுதான் டி.என்.சேஷனுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பை வகித்தார். தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை முழுமையாகச் செயல்படுத்தத் தொடங்கியது அந்த ஆறு ஆண்டுகளில்தான்.
தேர்தல் பார்வையாளர்கள் அறிமுகம்
வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவதும், வாக்குச் சாவடிகளுக்கு அருகே கலவரங்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி வாக்களிக்க வருபவர்களைத் திரும்பிப்போகச் செய்வதும் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கமாக இருந்துவந்தது. அத்தகைய இடங்களில் பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படைகளை இறக்கி, நிலைமையை மாற்றியவர் சேஷன். உத்தர பிரதேசத்தில் 1991 தேர்தலில் 873 வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. அடுத்து நடந்த 1992 தேர்தலில் இந்த எண்ணிக்கை 255 ஆகக் குறைந்தது. தேர்தல் நாளில் நடைபெறும் கொலைக்குற்றங்கள் 36-லிருந்து 3 ஆகக் குறைந்தன. தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்தது. வாக்களிப்பதிலிருந்து தடுக்கப்பட்டுவந்த தலித் சமூகத்தவர்கள், பாதுகாப்பு உணர்வோடு வாக்குச்சாவடிகளை நோக்கி வருவதற்கு அவர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இருந்தன.
1996 பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக 1,500 தேர்தல் பார்வையாளர்களை நியமித்தார் சேஷன். சராசரியாக, ஒரு தொகுதிக்கு மூன்று பேர் என்ற கணக்கில். ஒன்றரை லட்சம் அரசுப் பணியாளர்கள் வாக்குச் சாவடிகளில் பணியாற்றினார்கள். வாக்குச் சாவடிகளுக்கு வெளியே ஆறு லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். சுமார் மூன்று லட்சம் பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள். உத்தர பிரதேசத்தில் மட்டும 1.25 லட்சம் பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். தேர்தலையொட்டி நடைபெற்றுவந்த வன்முறைச் சம்பவங்கள் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது அந்தத் தேர்தலுக்குப் பிறகுதான். 1991 தேர்தலின்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் 3,363. அத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் 1999 தேர்தலில் 5 மட்டுமே நடந்தன.
நடத்தை விதிமுறைகள்
‘சேஷனுக்கு முன்புவரை தேர்தல் ஆணையர்கள் தேர்தல் முடிவுகளை அறிவிப்பவர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்தான் தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்துபவராக இருந்தார்’ என்றார் முன்னாள் தேர்தல் ஆணையர் ஹெச்.எஸ்.பிரம்மா. தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்கியதிலும் சேஷனுக்குப் பெரும்பங்கு உண்டு. தேர்தலில் போட்டியிட்ட மகனுக்காக ஆளுநர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதற்காக மத்திய பிரதேசத்தில் வாக்குப் பதிவு தள்ளிவைக்கப்பட்டது, பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆளுநர் பதவி விலக வேண்டியிருந்தது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதும் சேஷனின் காலத்தில்தான். வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுகள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை 1996 தேர்தலில் தீவிரமாகப் பின்பற்றப்பட்டது. வாக்காளர்களை அரசியல் கட்சிகளே வாக்குச் சாவடிக்கு அழைத்துவருவது தடுக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு உதவுவதற்காக வாக்குச் சாவடி அருகிலேயே அரசியல் கட்சிகள் முகாம் அமைப்பதும் தடுக்கப்பட்டது.
தேசம் தழுவிய பிரபல்யம்
இந்தியத் தேர்தல் ஆணையர்களிலேயே அதிகப் பிரபல்யத்தைப் பெற்றவர் டி.என்.சேஷன்தான். 1994-ல் நடந்த ஒரு கணக்கெடுப்பின்படி கிராமம், நகரம் என்ற பேதமில்லாமல் நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு அவரது பெயர் பரிச்சயமாகியிருந்தது. சேஷனின் மீது குற்றச்சாட்டுகள் இல்லாமலும் இல்லை.
1991 தேர்தலில் வி.பி.சிங்கின் ஜனதா தளத்துக்கு நெருக்கடி கொடுத்ததாக விமர்சனங்களும் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சி அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து அது தோல்வியடைந்தும் இருக்கிறது. தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காகவே பத்திரிகைகளில் பேட்டிகள் கொடுக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
அதே நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை அரசியல் கட்சிகள் அச்சத்தோடு பார்க்கத் தொடங்கின என்பதையும் மறுக்க முடியாது. 1993-ல் தேர்தல் ஆணையத்தில் மேலும் இரண்டு ஆணையர்கள் நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார் சேஷன். தேர்தல் ஆணையத்தின் எந்தவொரு முடிவும் ஆணையர்களின் அறுதிப்பெரும்பான்மையோடு எடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.
இன்று தேர்தல் நடைமுறையில் நிகழ்ந்துவரும் மாற்றங்களுக்கு முன்னோடியாக இருந்தவர் சேஷன் என்பதை மறுக்க முடியாது. ‘தேர்தல் ஆணையத்துக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்திக்கொடுத்ததே சேஷன்தான்’ என்ற முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்தின் வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT