Published : 30 Mar 2019 09:14 AM
Last Updated : 30 Mar 2019 09:14 AM
த.அசோக்குமார்
கடந்த காலங்களில் திருவிழா போல் நடந்த தேர்தல் தற்போது தேர்தல் ஆணையத்தின் கடுமையான கெடுபிடிகளால் களையிழந்துள்ளது. போதிய வருவாய் ஈட்ட முடியாமல் ஓவியர்கள், கிராமிய கலைஞர்கள் பாதிப்பை எதிர் கொள்கின்றனர்.
கிராமங்களில் கோயில் திருவிழா போல் முன் காலத்தில் தேர்தலின் போது ஊரே களைகட்டி காணப்படும். வீடுகள்தோறும் சின்னங்கள் வரைவது, ஆட்டோக்களில் பிரச்சாரம் செய்வது, ஆடல், பாடல் என கொண்டாட்டமானதாக இருந்தது.
தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடத்தை விதிகள் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், பல்வேறு வகையான தொழில்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறது.
இதுகுறித்து ஓவியர் ஒருவர் கூறும்போது, “பழங்காலத்தில் தேர்தலுக்கு 2 மாதம் முன்பே சின்னங்கள் வரைய சுவர்களை போட்டி போட்டு முன்பதிவு செய்வர். கிராமங்களில் வீடுகள்தோறும் சின்னங்கள் வரையும் வேலை கிடைத்தது. இதனால், தேர்தல் காலத்தில் வருவாய் அதிகமாக கிடைத்தது.
ஒரு வீட்டில் அண்ணன், தம்பி வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களது வீட்டு சுவரில் 2 கட்சிகளின் சின்னங்களும் இருக்கும். கட்சி தொண்டர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வீடுகளில் தாங்கள் சார்ந்துள்ள கட்சி சின்னங்களை பதிவு செய்தார்கள். சின்னம் இல்லாத வீட்டைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.
வருவாய் பாதிப்பு
இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. நகர்ப்பகுதி களின் சுவர்களில் விளம்பரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் வீட்டு உரிமை யாளரின் அனுமதி பெற்றே சின்னம் வரைய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஓவியர்களுக்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
கரகாட்ட கலைஞர்கள், மேள கலைஞர்கள், மேடை நடன கலைஞர்கள் உள்ளிட்ட கிராமிய கலைஞர்களும் தேர்தல் காலங்களில் அதிகளவில் பயனடைந்தனர். இப்போது அவர்களுக்கும் போதிய வருவாய் கிடைக்கவில்லை. ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்வது, வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று, வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவது, வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பந்தல் அமைத்து பூத் சிலிப் வழங்குவது என பல்வேறு நடைமுறைகள் மாறி வருகின்றன.
மாற்று வழியில் கட்சிகள்
தேர்தல் ஆணையம் ஒரு வழியை அடைத்தால், அரசியல் கட்சிகள் மாற்று வழிகள் மூலம் தங்கள் வேலைகளை கச்சிதமாக முடித்து விடுகின்றன. திருமண மண்டபங்களில் உணவு வழங்கினால் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்பதால், முன்கூட்டியே நகர, கிளை, வார்டு நிர்வாகிகளிடம் பணத்தை கொடுத்து விடுகின்றனர். கூட்டம் முடிந்ததும் வெவ்வேறு ஹோட்டல்களுக்கு தொண்டர்களை அழைத்துச் சென்று, உணவு வாங்கிக் கொடுக்கின்றனர்.
பணம் பறிமுதல் நடவடிக்கை யால் வியாபாரிகள், சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி, 2 தொகுதிகளில் தேர் தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
சமூக வலைதளங்கள்
இப்போது பிரச்சாரத்துக்கு 2 வார காலமே அவகாசம் உள்ளது. இந்த குறுகிய காலத்தில் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பது சாத்தியமற்றது. வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதே இப்போது அதிகமாக உள்ளது. சுயேச்சை வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை.
ஓவியர்கள், மைக் செட் தொழிலாளிகள், பந்தல் தொழிலாளிகள், கிராமிய கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருவாய் கிடைக்காமல் தேர்தல் காலம் கடந்து விடுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT