Published : 03 Mar 2019 02:11 PM
Last Updated : 03 Mar 2019 02:11 PM
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பான தனது முடிவை விஜயகாந்த் இதில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஸ்டாலின், திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் ஆகியோர் சந்தித்துப் பேசினர். தேமுதிகவைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தொடர்ந்து பேசி வந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 4 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதால், தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேமுதிகவைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை திமுக கைவிட்டது.
அதேநேரம், தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமகவும் இதை விரும்பியதால், அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். 4 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங் களவை தொகுதி தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தேமுதிக தரப்பில் 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் குறிப்பிட்ட அளவு இடங்கள் கோரப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால், இழுபறி நிலை நீடிக்கிறது.
இறுதியாக, அதிமுக தரப்பில் கூறப்பட்ட மக்களவை, மாநிலங்களவை தொகுதிகளுடன், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி அமைத்து போதிய இடங்களை பெறுவது, 21 தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என பேசப்பட்டது.
இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் நேற்று முன் தினம் வந்தார். 2 மாதங்களுக்குப் பிறகு, கட்சி அலுவலகத்துக்கு வந்த அவரைக் காண தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வத்தோடு திரண்டிருந்தனர். தேர்தல் பணிகள் தொடர்பாக 40 நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோ சனை நடத்தினார். இதில் துணை செயலா ளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, பொருளா ளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சூழலில் இன்று சமக தலைவர் சரத்குமார் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். ஒத்த கருத்துள்ளவர்கள் இணைய வாய்ப்புள்ளதாகவும், அரசியல் தொடர்பான தனது கருத்துகளை விஜயகாந்திடம் கூறியதாகவும் சரத்குமார் கூறினார்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ''தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், தேமுதிக அணி செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்'' என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT