Published : 18 Mar 2019 11:30 AM
Last Updated : 18 Mar 2019 11:30 AM
சிவகங்கை தொகுதியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுகவை நம்பியே ராஜா களத்தில் இறங்குகிறார்.
சிவகங்கை மாவட்ட பாஜகவில் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் எதிரும், புதிருமாகச் செயல்படுகின்றனர். இதனால், சிவகங்கை மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் எச்.ராஜாவை நிறுத்தக் கூடாது என கட்சித் தலைமைக்கு பொன். ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வந்தனர்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கியும் எச். ராஜா 1.33 லட்சம் வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இதனால் எச்.ராஜாவை நிறுத்துவதற்குப் பதில், அதிமுகவுக்கு கொடுத்து விடலாம் என கட்சித் தலைமையை பொன். ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஆனால், கட்சி மேலிடத்தின் உத்தரவை அடுத்து சிவகங்கை தொகுதியை எச். ராஜாவுக்கு ஒதுக்குவது உறுதியானது. இதையடுத்து, தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் நிற்கும் 5 தொகுதிகளில் ஒரு தொகுதியை இப்போதே கழித்து விடலாம் என பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சொந்தக் கட்சியினரை நம்பி களத்தில் இறங்கினால் வெற்றி பெறுவது சிரமம். அவர்கள் உள்ளடி வேலை பார்க்கவும் தயாராக உள்ள நிலையில், அதிமுகவை நம்பியே எச். ராஜா முழுமையாகக் களத்தில் இறங்குகிறார்.
இந்நிலையில், சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக உள்ளூர் நிர்வாகிகளை எச். ராஜாவின் ஆதரவாளர்கள் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT