Published : 23 Mar 2019 09:52 AM
Last Updated : 23 Mar 2019 09:52 AM
திண்டிவனம் மக்களவைப் பொதுத் தொகுதியாக இருந்தது, தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் விழுப்புரம் தனித் தொகுதியாகியிருக்கிறது. சென்னை மாகாணத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இத்தொகுதியில்தான் உள்ளது. திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்ரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதி இது. சர்வதேச நகரமான ஆரோவில் இந்தத் தொகுதியைச் சேர்ந்தது. திருவக்கரை கிராமத்தில் காணப்படும் கல்மரங்கள் புகழ்பெற்றவை. பட்டையில்லாத தாவர பேரினத்தைச் சேர்ந்தவை இவை.
பொருளாதாரத்தின் திசை: உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டை, திண்டிவனம் அருகே ஒரு தொழிற்பேட்டை போன்றவற்றைத் தவிர குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் இல்லை. தொழில் தொடங்க வருபவர்களில் பலர், புதுச்சேரி அரசு வழங்கும் சலுகைகளுக்காக அங்கு சென்றுவிடுகிறார்கள். இதனால், இப்பகுதியில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக, இப்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவின் எந்த நகரத்துக்குச் சென்றாலும் அங்கு விழுப்புரம்காரர் நிச்சயம் இருப்பார் என்று சொல்லும் அளவுக்குப் புலப்பெயர்வு அதிகரித்திருக்கிறது. விவசாயக் கூலித் தொழில் செய்பவர்கள் அதிகம்.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: மிகவும் பின்தங்கிய பகுதி இது. குடிசைகள் நிறைந்த மாவட்டம் என்று விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒரு பெயர் உண்டு. கழிப்பிட வசதியும் மிக மோசமான நிலையில் இருக்கிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் திண்டிவனத்தைக் கடந்தே ஆக வேண்டும். ஆனால், திண்டிவனத்தில் பேருந்து நிலையம் உரிய வசதிகளுடன் இல்லை. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ரயில்வே க்ராஸிங்கை கடந்தே நகருக்குள் செல்ல வேண்டும் எனும் நிலை. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடம் தேர்வு செய்து அங்கு பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என்பது மக்கள் கோரிவருகிறார்கள். வக்ஃபு போர்டுக்குச் சொந்தமான இடத்தில் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் காவேரிபாக்கம் ஏரியில் அமைக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் முரண்பட்டு நிற்பதால், பேருந்து நிலையம் அமைவது இழுபறியாகவே இருக்கிறது.
நீண்டகாலக் கோரிக்கைகள்: வேலை வாய்ப்புகளைத் தரும் தொழிற்பேட்டைகள், உயர் கல்வி வளர்ச்சிக்கான மேம்பாட்டுப் பணிகள், சவுக்கு - காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. பாலாறு, செய்யாறு இரண்டையும் இணைத்து 36 ஏரிகளுக்கு நீர் வரும் பாதையைச் சரிசெய்யும் வகையில் திட்டமிடப்பட்ட நந்தன் கால்வாய் திட்டம், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் மூலம் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இதற்கிடையில் கால்வாய்களின் புனரமைப்புக்காகத் தமிழக அரசு ரூ.13.45 கோடி ஒதுக்கியிருக்கிறது. எதுவுமே இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கம்.
ஒரு சுவாரஸ்யம்: 1952-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவர், புகழ்பெற்ற பத்திரிகையாளரான ராம்நாத் கோயங்கா. அந்தத் தேர்தலில், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி வேட்பாளர் திருக்குறள் வீ.முனுசாமி வெற்றி பெற்றார். 1926-லேயே சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் ராம்நாத் கோயங்கா. அப்பதவியில் இருந்தபோது அரசின் தவறுகளை விமர்சனம் செய்ய அவர் தயங்கியதில்லை!
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் வன்னியர், பட்டியலின சமூகத்தினர் ஏறக்குறைய சம அளவில் வசித்துவருகின்றனர். முதலியார், உடையார், ரெட்டியார், நாயுடு சமுதாயத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அதிமுக, திமுக கட்சிகளின் நிலையான வாக்கு வங்கியும், பாமக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் வாக்குகள் சேரும் விகிதத்தைப் பொறுத்தும் வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: திண்டிவனம் மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த ஜெயராமன், முனுசாமி, சுயேச்சையாக போட்டியிட்ட சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதன் பிறகு, தொடர்ந்து ஏழு முறை காங்கிரஸ் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது. 1967, 1996 தேர்தல்களில் திமுக வென்றது. 1998, 1999-ல் மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரனும், 2004-ல் பாமகவைச் சேர்ந்த தன்ராஜும் வெற்றி பெற்றனர். 2009-ல் அதிமுகவைச் சேர்ந்த ஆனந்தன் வெற்றி பெற்றார். 2014-ல் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 14,27,874
ஆண்கள் 7,14,211
பெண்கள் 7,13,480
மக்கள்தொகை எப்படி?
மொத்தம் 34,58,873
ஆண்கள் 17,40,819
பெண்கள் 17,18,054
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள் 91.79%
முஸ்லிம்கள் 3.87%
கிறிஸ்தவர்கள் 4.04%
பிற சமயத்தவர் 0.20%
எழுத்தறிவு எப்படி?
மொத்தம் 71.88%
ஆண்கள் 80.55%
பெண்கள் 63.15%
புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT