Published : 13 Mar 2019 03:59 PM
Last Updated : 13 Mar 2019 03:59 PM
அதிமுகவில் கோஷ்டிப் பூசலால் மக்களவைத் தொகுதியில், அக்கட்சி வேட்பாளராக அறிவிக்க ப்படுபவர், உள்ளூர் முக்கிய நிர்வாகிகளை சமாளித்து தேர்தல் வேலை செய்ய பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.
மதுரை அதிமுகவில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் விவி. ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் செல்வாக்குடன் இருப்பவர்கள். இதில், சீனியரான விவி. ராஜன் செல்லப்பாவும், அமைச்சர் செல்லூர் கே. ராஜூவும் ஆரம்ப காலம் முதலே, கட்சிக்குள் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருமங் கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருவாய்த்துறை அமைச்சரான ஆர்.பி. உதயகுமார், மாவட்டத்தின் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கினார். அதனால், மதுரை அதிமுகவில் மூன்று கோஷ்டிகள் உருவாகி பூசலும் அதிகரித்தது. இதில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மற்ற இருவரையும் பின்னுக்குத் தள்ளி ஆளும் தலைமைக்கு நெருக்கமாகி கட்சியில் வேகமாக வளர ஆரம்பித்தது மற்ற இருவருக்கும் புகைச்சலை ஏற்படுத்தியது.
அதனால், எதிரும், புதிருமாகச் செயல்பட்ட செல்லூர் ராஜூவும், விவி.ராஜன் செல்லப்பாவும் தற்போது ராசியாகி விட்டனர். ஆனாலும், அவர்களுக்குள் முன்பிருந்த உரசல் அவ்வப்போது வெளிப்படுவதாக கட்சியினரே தெரிவிக்கின்றனர். தேர்தல்களில் முன்பு ஜெயலலிதா இருந்தபோது அவர் கைகாட்டும் வேட்பாளரை கோஷ்டிப் பூசலை மறந்து கட்சியினர் வெற்றிபெறச் செய்வர். தற்போது அதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தனித்தனி அதிகார மையங்களாகச் செயல்படுகின்றனர். அதனால், வருகிற மக் களவைத் தேர்தலில் ஒருவர் சிபாரிசு செய்யும் நபருக்கு, மற்றவர்கள் எந்த அளவுக்கு இறங்கி வேலை செய்வார்கள் என்பது தெரியவில்லை. அதனால், வேட்பாளராக அறிவிக்கப்படும் நவர் இவர்களைச் சமாளித்துதான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அதிமுகவினரை பொறுத்தவரை கட்சிக்குள் பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் வெற்றிக் கனியை பறிப்பது மட்டுமே எங்கள் நோக்கமாக இருக்கும். மதுரை அதிமுகவுக்குச் சாதகமாக இருப்பதால், கட்சி மேலிடம் யாரை களமிறக்கினாலும் வெற்றிபெறச் செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிமுகவில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்துள்ளது.
முதல்வர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேர்காணலை நடத்தினர். தேனி மாவட்டத்துக்கு மட்டுமே விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக நேர்காணல் நடத்தப்பட்டது.
மதுரை உள்பட மற்ற மாவட்ட மக்களவைத் தொகுதி, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஒரே அறையில் வைத்து நேர்காணல் நடத்தி உள்ளனர்.
அதன்படி மதுரை தொகுதிக்கு விண்ணப்பித்த 29 பேருக்கும், ஒரே நேரத்தில் நேர்காணல் நடத்தினர். அப்போது, கட்சித் தலைமை யாருக்கு வேண்டுமானாலும் ‘சீட்’ கொடுக்கும், அவர்கள் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும், ’’ என்று அறிவுறுத்தி உள்ளனர். தனித்தனியாக சுய விவரங்களைக் கூட நேர்காணலின்போது கேட்கவில்லை. ஏதாவது கோரிக்கை இருந்தால் மனுவாக தரும்படி கூறி உள்ளனர். அதனால் ஆர்வத்தோடு போட்டியிட விண்ணப்பித்திருந்த அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியுடன் திரும்பி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT