Published : 27 Mar 2019 08:31 AM
Last Updated : 27 Mar 2019 08:31 AM
சேர, சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமைக்குரியது கரூர். சோழர்கள் முடிசூடிக்கொள்ளும் நகராகவும், அவர்களின் வணிக நகராகவும் திகழ்ந்தது. அந்நிய நாடுகளுடன் கரூர் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு அமராவதி ஆற்றில் கிடைந்த ரோம, கிரேக்க நாணயங்களே சாட்சி. கரூர் மக்களவைத் தொகுதியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி; திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
பொருளாதாரத்தின் திசை: வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.3,000 கோடி அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது. ஏற்றுமதி வருவாயைப் பெருக்க தற்பொது ஆயத்த ஆடை உற்பத்தியிலும் கால் பதித்துள்ளது. பேருந்து கூண்டு கட்டுதல், கொசுவலை உற்பத்தி ஆகியவையும் பிரதான தொழில் களாக உள்ளன. மேலும், அதிகளவு நிதி நிறுவனங்கள் கொண்ட பகுதி. கரூர் வைஸ்யா வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி ஆகிய இரு தனியார் வங்கிகள் உருவானதே அதற்கு சாட்சி. புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், சிமெண்ட் ஆலை, இஐடி பாரி சர்க்கரை ஆலை ஆகியவை செயல்படுகின்றன. வாழை, வெற்றிலை, கரும்பு, நெல், கடலை, எள், சூரியகாந்தி, கோரை ஆகியவை விளைகின்றன. கரூர், வேடசந்தூர், விராலிமலை ஆகிய தொகுதிகளில் தொழிற்சாலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதி காவிரி, அமராவதி பாசனப் பகுதிகளைக் கொண்டது. கடவூர், தோகைமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளான உள்ளன. இந்தப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு முக்கியப் பிரச்சினை. வெள்ள காலங்களில் காவிரி, அமராவதியில் செல்லும் உபரி நீரை பெரியதாதம்பாளையம், பஞ்சப்பட்டி உள்ளிட்ட ஏரிகளுக்குக் கொண்டுசெல்ல போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆற்றில் சாயக்கழிவு திறக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டப்படும் நிலையில், இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் சாயப்பூங்கா அமைக்க வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கரூர் பேருந்து நிலைய இடநெருக்கடியால் நகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் முக்கியமான பிரச்சினை.
நீண்ட காலக் கோரிக்கைகள்: கரூரில் செயல்பட்ட 500-க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டன. இதனால், பல ஆயிரம் பேர் வேலையிழந்தனர். பூஜ்ய கழிவு முறையில் செயல்படும் 60 சாயப்பட்டறைகள் மட்டுமே தற்போது செயல்படுவதால் சாயமிடுவதற்காக ஜவுளி உற்பத்தியாளர்கள் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாயப்பூங்கா இந்தப் பிரச்சினைக்கும் தீர்வு தரும். கரூர், குளித்தலையில் புதிய நவீனப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்; கரூர் போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சுற்றுவட்டச்சாலை அமைக்க வேண்டும்; கரூரில் அரசு மகளிர் கல்லூரி, அரவக்குறிச்சி, காணியாளம்பட்டியில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும்; கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் தீர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
ஒரு சுவாரஸ்யம்: 1999 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் ம.சின்னசாமி வென்றார். தோல்வியடைந்த திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி, சின்னசாமி யின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு காரணமாக வாக்குச்சீட்டுகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாதுகாக்கப் பட்டன. 2009-ல், சின்னசாமி திமுகவில் இணைந்தார். 2014 தேர்தலில் அதிமுகவின் மு.தம்பிதுரையிடம் தோல்வியடைந்தார். இப்படிப் பல அணி மாறல்களைப் பார்த்த தொகுதி இது.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் அதிகம் உள்ள பகுதி. அதிமுக, காங், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. இருப் பினும் கட்சி, கூட்டணி பலம் மற்றும் வேட்பாளர் செல்வாக்கு ஆகியவையே வெற்றியைத் தீர்மானிக்கும். முத்தரையர், சோழிய வெள்ளாளர், முதலியார், ரெட்டியார், நாயுடு, பட்டியலின சமூகத்தினரும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: இதுவரை நடந்த 15 தேர்தல்களில் காங்கிரஸும் அதிமுகவும் தலா ஆறு முறை வெற்றிபெற்றுள்ளன. சுதந்திரா கட்சி, திமுக, தமாகா தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. அதிமுக சார்பில் நான்கு முறை வென்றவர் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
மக்கள்தொகை எப்படி?
மொத்தம் 10,64,495
ஆண்கள் 5,34,392
பெண்கள் 5,30,101
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 13,65,802
ஆண்கள் 6.69,115
பெண்கள் 6.96,623
மூன்றாம் பாலினத்தவர்கள்: 64
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள்: 88.28%
முஸ்லிம்கள்: 7.48%
கிறிஸ்தவர்கள்: 3.12%
எழுத்தறிவு எப்படி?
மொத்தம் 75.76%
ஆண்கள் 84.46%
பெண்கள் 67.05%
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT