Published : 04 Mar 2019 02:02 PM
Last Updated : 04 Mar 2019 02:02 PM

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இரா.முத்தரசன், "வரும் நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவும், மத்தியில் ஆட்சி செய்யும் வகுப்புவாதக் கட்சியான பாஜகவை அகற்றவும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை அகற்றவும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஒரு மகத்தான பணியை மேற்கொண்டுள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை இன்று மிக சுமுகமான முறையில் நடைபெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், நாங்களும் கலந்து பேசியதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு என முடிவு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

தமிழகத்தில் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து இதுவரை அறிவிப்பு வரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலோடு அதற்கான அறிவிப்பும் வரும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்தியத் தேர்தல் ஆணையம் எந்தக் கட்சியின் முடிவுக்கும் பணியாமல் தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும்.

இது அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்ட அணி. மக்கள் நலனுக்காக, மாநில உரிமைகளுக்காக கடந்த 2 ஆண்டுகளாக திமுக தோழமைக் கட்சிகளுடன் இணைந்து போராடியிருக்கிறோம். நாடும் நமதே, நாடாளுமன்றமும் நமதே, நாற்பதும் நமதே" என இரா.முத்தரசன் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, திமுக சார்பாக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன், வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x