Published : 01 Mar 2019 08:38 AM
Last Updated : 01 Mar 2019 08:38 AM

முதல்வர், துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்தும் தென் சென்னையை தர மறுத்த ஜெயக்குமார்- கனிமொழி Vs தமிழிசை; களைகட்டும் தூத்துக்குடி

அமைச்சர் ஜெயக்குமார் தன் மகன் ஜெயவர்தன் போட்டியிடும் தென் சென்னை தொகுதியை பாஜகவுக்கு விட்டுத்தர மறுத்து விட்டார். இதையடுத்து, முதல்வர், துணை முதல்வரின் வேண்டுகோளின் பேரில் தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக போட்டியிட தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஒப்புக்கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, வட சென்னை, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்தது. இதை ஏற்க மறுத்த பாஜக, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தென் சென்னை மற்றும் ராமநாதபுரம் அல்லது திருச்சி ஆகிய 5 தொகுதிகளைக் கேட்டது.

தென் சென்னை தொகுதிக்கு பாஜக எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 1998-ல் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தபோது தென் சென்னையில் பாஜக மூத்த தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டு, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவிடம் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2004-ல் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணிஅமைந்தபோது, பாஜகவுக்கு தென் சென்னைக்கு பதிலாக வட சென்னை  ஒதுக்கப்பட்டது. பாஜக சார்பில் வட சென்னையில் களமிறக்கப்பட்ட பிரபல நடிகர் எம்.என்.நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார் தோல்வி அடைந்தார்.

2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என இல.கணேசன் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தென் சென்னையில் போட்டியிட தமிழிசை விருப்பம் தெரிவித்துள்ளார்.

தற்போது தென் சென்னை தொகுதி எம்.பி.யாக உள்ள தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் மகன் ஜெ.ஜெயவர்தன் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். எனவே, தனக்காக தென் சென்னை தொகுதியை பெற்றுத் தருமாறு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரிடம் தமிழிசை வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

இதனால், வட சென்னையை எடுத்துக்கொண்டு, தென் சென்னையை தமிழிசைக்கு விட்டுத்தருமாறு ஜெயக்குமாரிடம் முதல்வர்

பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் பேசியுள்ளனர். ஆனாலும் ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, தூத்துக்குடியில் போட்டியிட தமிழிசை ஒப்புக்கொண்டுவிட்டதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

தூத்துக்குடியில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரான கனிமொழி எம்.பி.போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்காக ஜனவரி 18-ம் தேதி முதல்  தூத்துக்குடியிலேயே முகாமிட்டுள்ள கனிமொழி, கிராமசபை கூட்டங்கள், வேலைவாய்ப்பு முகாம், பெண்களுக்கான கோலப்போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

தற்போது பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது. கோவில்பட்டியில் பாஜக நாளை நடத்தும் பைக் பிரச்சார பேரணியில் பங்கேற்று, தனது பிரச்சாரத்தை தமிழிசை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தூத்துக்குடி தொகுதி களைகட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x