Published : 01 Mar 2019 08:35 AM
Last Updated : 01 Mar 2019 08:35 AM

தமிழக காங்கிரஸில் தலைவர், செயல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தடை?- ராகுல் காந்தி ஆலோசனை

தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும்  செயல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு  புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிட கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி கேட்டுக் கொண்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துவிட்டதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

ஆனால், செயல் தலைவர்கள் எச்.வசந்தகுமார் - கன்னியாகுமரி, கே.ஜெயக்குமார் - தென்காசி, மயூராஜெயக்குமார் - கோவை, விஷ்ணுபிரசாத் - ஆரணி, மோகன் குமாரமங்கலம் - சேலம் தொகுதிகளில் போட்டியிட தீவிர முயற்சி கொண்டுள்ளனர்.

இதுதவிர கார்த்தி சிதம்பரம் - சிவகங்கை, எஸ்.திருநாவுக்கரசர் - ராமநாதபுரம், கே.வீ.தங்கபாலு - சேலம், ஈவிகேஎஸ் இளங்கோவன் - திருப்பூர் அல்லது ஈரோடு, சுதர்சன நாச்சியப்பன் - சிவகங்கை, மாணிக் தாகூர் - விருதுநகர், ஜே.எம்.ஆருண் - தேனி, கு.செல்வப்பெருந்தகை - காஞ்சிபுரம், பி.விஸ்வநாதன் - காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர், நாசே ராமச்சந்திரன் - அரக்கோணம், ரூபி மனோகரன் - கன்னியாகுமரி, டாக்டர் ஏ.செல்லக்குமார் - கிருஷ்ணகிரி என காங்கிரஸ்மூத்த தலைவர்களும், அவர்களது வாரிசுகளும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர். இதனால் திமுகவிடம் கொடுக்க வேண்டிய 9 தொகுதிகளின் பட்டியலை கொடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது.

இந்நிலையில் 9 தொகுதிகளுக்கு 20-க்கும் அதிகமானோர் போட்டியிட விரும்புவதால் கோஷ்டி பிரச்சினையை சமாளிக்க தமிழக காங்கிரஸ் தலைவர், 5 செயல் தலைவர்களை தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணியிலும், தேர்தல் பணிகளிலும்  மட்டுமே கவனம் செலுத்த ராகுல் காந்தி அறிவுறுத்தியிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில புதுமுகங்களையும் ராகுல் காந்தி நிறுத்த விரும்புவதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x