Published : 02 Mar 2019 09:35 AM
Last Updated : 02 Mar 2019 09:35 AM

வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனுவில் சாதி, மதங்களை தவிர்த்த கமல்ஹாசன்

விருப்ப மனு தாக்கல் செய்பவர் எந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவர் என்ற விவரம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் விருப்ப மனுவில் கேட்கப்படவில்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் எந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்று பார்த்து நியமிக்க கூடாது என்று முக்கிய நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆரம்பம் முதலே அறிவுறுத்தி வருகிறார்.

‘மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் எந்த சாதி, மதத்தை சார்ந்த கட்சியும் அல்ல. அனைத்து தரப்பினருக்கும் பொதுவான கட்சி’ என்பதை முன்னிறுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். 

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. மனு தாக்கல் செய்பவர் எந்த சாதி, மதத்தை சேர்ந்தவர் என்று விருப்ப மனுவில் கேட்கப்படவில்லை.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியதாவது:

பொறுப்பாளர்களை நியமிக்கும் போதுகூட அந்தந்த வட்டாரங்களில் பெரும்பான்மை சாதி, மதத்தை சேர்ந்தவர்களை கமல்ஹாசன் நியமிக்கவில்லை. இயல்பாகவே சாதி, மதங்களால் மக்களை பிரித்துப் பார்க்கும் பார்வை அவருக்கு இல்லாததால் இந்த அணுகுமுறை அமைந்துவிடுகிறது. அதனால்தான் விருப்ப மனுக்களில் சாதி, மதம் கேட்கப்படவில்லை. தனி தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளரின் சாதியை பார்க்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. எனவே, நேர்காணலின்போது அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் சாதி சான்றிதழ் மட்டும் சரிபார்க்கப்படும். மற்ற எந்த வேட்பாளருக்கும் சாதி, மதம் பார்க்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x