Published : 15 Mar 2019 08:55 AM
Last Updated : 15 Mar 2019 08:55 AM
மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ள நிலையில் தென்காசி (தனி) தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் என்ற ஊரைச் சேர்ந்த திமுக பிரமுகரின் மகன் தேவதாஸுக்கு சீட் வழங்கப்பட அதிகமான வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
இவர் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பின்னணி உடையவர் எனத் தருகிறது. தேவதாஸ், தென்காசியின் கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
இதேபோல், தென்காசி மேலகரம் பகுதியைச் சேர்ந்த ராஜா திமுக வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இளம் வழக்கறிஞரான இவர் கடந்த 5 ஆண்டுகளாக திமுகவில் இருக்கிறார். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் தேவதாஸ் அல்லது ராஜா இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
காங்கிரஸுக்கு கை கொடுக்காதது ஏன்?
1957 தொடங்கி 1991 வரை காங்கிரஸின் கோட்டையாகவே தென்காசி நாடாளுமன்றத் தொகுதி இருந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அருணாச்சலம் 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அருணாச்சலம் வெற்றி பெற்றார். 9 முறை காங்கிரஸுக்கு வெற்றி தேடித் தந்திருந்தாலும்கூட காங்கிரஸுக்கு தென்காசி தொகுதி மறுக்கப்படுவதற்கு சாதி வாக்குகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதே எனக் கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களுள் ஒருவரான கே.ஜெயக்குமார் தனக்கு சீட் தரும்படி அழுத்தம் கொடுத்ததாகவும். ஆனாலும் இவரால் சாதி வாக்குகளைப் பெற இயலாது என்பதால் திமுகவுக்கு சீட் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் விவரமறிந்த வட்டாரம் கூறுகின்றது.
கிருஷ்ணசாமியின் நம்பிக்கை:
திமுக தொகுதியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழக கட்சியின் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடியின் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான கிருஷ்ணசாமி தேவேந்திரகுல மக்களின் ஆதரவால் தென்காசியில் வலுவான அடித்தளம் அமைத்திருப்பதாகவும் வெற்றி தங்களுக்கே என்றும் முழங்கி வருகிறார்.
பெண் வேட்பாளரை நிறுத்தவுள்ள அமமுக?
இதற்கிடையே அமமுக சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்றும் இவர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஈஸ்வரனின் உறவினர் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT