Published : 13 Mar 2019 04:22 PM
Last Updated : 13 Mar 2019 04:22 PM
இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தூர் தொகுதியில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை உடைக்க அமமுகவும், அதை சாதமாக்கி எளிதில் வெற்றிபெறலாம் என்ற திமுகவின் திட்டமும் பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடம் ஏற்பட் டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியும் ஒன்று. காமராஜர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு காமராஜர் வெற்றி பெற்றுள்ளார்.
சாத்தூர் தொகுதியில் சாத்தூர் நகராட்சி, சாத்தூர் ஒன்றியம் மற்றும் அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடம லாபுரம், படந்தாள், ஆலம்பட்டி, இருக் கன்குடி உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் உள்ளன.
சாத்தூர் தொகுதியில் 3 முறை காங்கிரஸும், ஒருமுறை பார்வர்டு பிளாக் கட்சியும், 4 முறை அதிமுகவும், 4 முறை திமுவும் வென்றுள்ளன. கடந்த 2006ல் திமுக சார்பில் போட்டியிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.பி. உதயகுமாரும் வெற்றிபெற்றனர். அதைத் தொடர்ந்து 2016-ல் அதிமுக சார்பில் எஸ்.ஜி. சுப்பிரமணியனும், திமுக சார்பில் வி.ஸ்ரீனிவாசனும், மதிமுக சார்பில் ஏ.ஆர். ரகுராமனும் போட்டியிட்டனர். அதோடு, மேலும் 16 வேட்பாளர்களும் களம் இறங்கினர்.
அப்போது, சாத்தூர் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கை ஓங்கியிருந்தது. அதன் காரணமாக, அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் 71,513 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் வி.ஸ்ரீனிவாசன் 67,086 வாக்குகள் பெற்று வெறும் 4,427 வாக்கு வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். அதிமு கவிலிருந்து வெற்றிபெற்ற எஸ்.ஜி.சுப்பிரமணியன், தற்போது அமமுகவில் இணைந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாகவே, தற்போது சாத்தூரில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இம்முறை அமமுக சார்பில் எஸ்.ஜி. சுப்பிரமணியனே போட்டியிடுகிறார். அதிமுகவில் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவரும், அதிமுக மாவட்ட பொருளாளருமான ராஜவர்மன் களம் இறக்கப்படுகிறார். மேலும், அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட நிர்வாகியும் வழக்கறிஞருமான சேதுரா மானுஜத்துக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கட்சியினர் கூறுகின்றனர். திமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட கோசுக்குண்டு வி.ஸ்ரீனிவாசனுக்கே இந்த முறையும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
சாத்தூர் தொகுதியில், கடந்த முறை ஆர்.பி.உதயகுமார் கட்சியை வளர்த்திருந்ததால் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை ஆர்.பி.உதயகுமார் சாத்தூர் தொகுதியில் இல்லாததாலும், கட்சி தாவியதால் எஸ்.ஜி.சுப்பிரமணியனுக்கு பழைய செல்வாக்கு இருக்குமா என எதிர் கட்சியினர் சந்தேகிக்கிறார்கள். மேலும், அதிமுகவின் வாக்குகள் இரண்டாக உடைவதால் இம்முறை எளிதாக வெற்றிபெறலாம் என திமுகவினர் கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT