Published : 19 Mar 2019 10:14 AM
Last Updated : 19 Mar 2019 10:14 AM
தொகுதி முழுவதும் நன்கு அறியப் பட்ட திமுக சார்பில் தொடர்ந்து 9-வது முறையாக போட்டியிடும் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் மற்றும் அமமுக, தமாகா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொ.முருகேசன் தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி ஆகிய இடங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதிமுகவில் 1972-ம் ஆண்டு முதல் அடிப்படை உறுப்பினராக இருந்தவர். சசிகலா தரப்பினருக்கு நெருக்கமானவர். அரசியல் கூட்டங்களில் அதிகம் தலைகாட்டாதவர் என்றாலும் தேர்தல் செலவுகளுக்கு தயங்காதவர் என்பதாலும் நிறுத்தப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப் பட்டவுடன் மன்னார்குடி, ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு, பட்டுக் கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குச் சென்று கட்சியின் முக்கிய நிர்வா கிகளைச் சந்தித்து வருகிறார். தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் கட்சியி னருடன் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகேசன், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய பிரச்சாரத்தை நேற்று முன்தினமே தொடங்கிவிட்டார் என்கிறார்கள் அக்கட்சியினர்.
நன்கு அறியப்பட்டவர்திமுக சார்பில் தொடர்ந்து 9-வது முறையாகப் போட்டியிடும் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் 5 முறை வெற்றி பெற்றதுடன், 2 முறை மத்திய நிதித் துறை இணை அமைச்சராக இருந்தவர் என்பதாலும், மாவட்டச் செயலாளராக இருந்ததாலும் தொகுதி முழுவதும் நன்கு அறியப்பட்டவராக உள்ளார்.
கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த இவர், இம்முறை மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். தொகுதியில் திமுக வினரை, கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்லும் பக்குவம் பெற்றவர். தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார தடையேதும் இல்லாத இவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று, ஆதரவு சேர்த்து வருகிறார்.
கைவிட்டுப் போன இத்தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெற டி.ஆர்.பாலு கோஷ்டியை ஒன்றிணைக்க முயன்று வருகின்றனர் திமுகவினர்.
நாளை (மார்ச் 20) தஞ்சாவூரில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் திமுகவினர் புதுதெம்புடன் தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
சைக்கிளால் தெம்புஅதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்துள்ள நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் தெம்பாக களமிறங்கியுள்ளார். பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையைச் சேர்ந்த இவரது குடும்பம் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம். இவரது சகோதரர் என்.ஆர்.ரெங்கராஜன் பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர். இவரது மைத்துனர் வி.என்.சுவாமிநாதன் 1980-85-ல் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர்.
தஞ்சாவூரில் இருசக்கர வாகன விற்பனை முகவராகவும், தம்பிக்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரியின் அறங்காவலராகவும் உள்ள நடராஜனின் தந்தை ராமசாமி தேவர், காமராஜர் மற்றும் ஜி.கே.மூப்பனார் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர்.
தஞ்சாவூரில் போட்டியிடும் மூவரும் முக்குலத்தோர் சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள். மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட, அரசியல் பின்னணியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் தொகுதி தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT