Published : 21 Mar 2019 11:46 AM
Last Updated : 21 Mar 2019 11:46 AM
மாற்று அரசியலை முன்வைக்கும் கட்சி, கொள்கைகளால் அறியப்படும் கட்சி என அடையாளப்படுத்தப்படும் இடதுசாரிகள் இயக்கத்திற்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் போர்க்களமாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் சரிவை இடதுசாரி இயக்கங்கள் சந்தித்தன. கடந்த தேர்தலில் தேசிய அளவில் மார்க்சிஸ்ட் போட்டியிட்ட 90 தொகுதிகளில் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 65 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன.
இதனைத் தொடர்ந்து மாநிலங்கள் அளவில் சந்தித்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் கேரளாவில் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. மேற்கு வங்கம், திரிபுராவில் இடதுசாரிக் கட்சிகளுக்கு பின்னடைவே ஏற்பட்டது. அதுவும் மேற்கு வங்கத்தில் 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு இடதுசாரிக் கட்சிகள் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீண்டும் பொதுத் தேர்தலை இடதுசாரிக் கட்சிகள் எதிர்கொள்ள உள்ளன. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 25 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகள் நான்கு இடங்களில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் இடதுசாரி இயக்கங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இடதுசாரிகள் இந்தத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள உள்ளனர் என்பது குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனுடன் பேசினோம்.
கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தல் இடதுசாரிகளுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?
ஒவ்வொரு தேர்தலும் அது நடத்தக் கூடிய அரசியல் சூழலைப் பொறுத்து முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக இந்தத் தேர்தலில் நமது அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை அம்சங்கள் மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், தேச ஒற்றுமை, மக்கள் ஒற்றுமை. இவை எல்லாம் ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தத் தேர்தலின் விளைவுகள் என்பது தேசத்தின் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ஜனநாயகத்துக்கு அந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் கடந்த ஐந்து ஆண்டு காலமாக ஆட்சி புரிந்த தேச ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, மதச்சார்பின்மைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது.
தேசியக் கட்சியாக தங்களை தக்க வைத்துக்கொள்ள இடதுசாரிகள் கடந்த தேர்தலிலிருந்து எப்படி மாறுபட்டுள்ளனர்?
கடந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான கட்சிகள் பத்து ஆண்டு கால ஆட்சியில் தேர்தலைச் சந்தித்தது. ஆட்சியில் இல்லாத பாஜகவும் தேர்தலைச் சந்தித்தது. கடந்த 2014 தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த இந்த ஐந்து வருடங்களில் இந்துத்துவா பரப்புரையை மேற்கொள்ளக் கூடிய நவீன தாராளமயமாக்கலை, பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்கி, நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்வாதாரத்தையும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய மோசமான ஆட்சி பாஜக தலைமையில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பாஜக தலைவர் அமித் ஷா அவர்களது கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது இந்தமுறை பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 50 வருடங்களுக்கு பாஜகதான் ஆட்சியில் இருக்கும் என்று கூறினார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஒரு சர்வாதிகாரப் பாதையில் செயல்படக் கூடிய இந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் எதிர்காலம் இருள்மயமாகிவிடும். இதுதான் கடந்த தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம். ஆகவே இதன் பின்னணியில்தான் நாங்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிப்பதை பிரதான இலக்காக இடதுசாரிகள் கருதுகிறோம்.
மேற்கு வங்கம், திரிபுரா, கேரளாவில் வலுவாக இருந்த இடதுசாரிகள் இன்று கேரளாவில் மட்டுமே ஆட்சியில் உள்ளனர். மீதமுள்ள இரண்டு மாநிலங்களில் இடதுசாரிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். அதைப் பற்றி?
இப்போதும் திரிபுரா, மேற்கு வங்கத்தில் சுதந்திரமான, முறையான தேர்தல் நடந்தால் இரண்டு மாநிலங்களிலும் இடதுசாரிகள்தான் ஆட்சி புரிவார்கள். திரிபுராவில் இருப்பது இரண்டு தொகுதி. இதில் 1 தொகுதிக்கு ஏப்ரல் 11-ம் தேதியும் மற்றொரு தொகுதிக்கு ஏப்ரல் 18-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு போடவே மக்கள் அஞ்சும் வகையில் அங்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. அங்கு அடக்குமுறை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இரண்டாவது ஒரு கட்சி அவர்கள் தேர்தலில் அடையும் வெற்றி தோல்வி குறித்து அக்கட்சியின் பலத்தையோ, கொள்கையையோ தீர்மானிக்க முடியாது.
இன்று இந்தியாவில் வகுப்புவாத பாஜக ஏற்படுத்திய பண மதிப்பிழக்கம், ஜிஎஸ்டி நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழகத்தின் தொழில்துறை அமைச்சரே இந்த ஜிஸ்டியால் 50,000 சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகக் கூறினார். இவ்வாறு மக்களுடைய வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு போராட்டம் நடத்தி பல மாற்றங்களை ஏற்படுத்தும் கட்சியாக இடதுசாரிகள் உள்ளனர்.
இடதுசாரி கட்சிகளைப் பொறுத்தவரை தென்னிந்தியாவில் கேரளாவைத் தவிர வேறு மாநிலங்களில் தங்களுக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கிறது. இது மக்களுக்கும் இடதுசாரிகளுக்கும் உள்ள இடைவெளியைக் காட்டுகிறதா? ஏன் இந்த இடைவெளியை இடதுசாரிகளால் உடைக்க முடியவில்லை?
இதை அவ்வாறு பார்க்க வேண்டாம். இடதுசாரிக் கட்சிகள் மக்கள் நலனுக்காக சுயேட்சையாகப் போராட்டம் நடத்தும். மற்ற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டாகவும் நடத்தும். தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகளுடன் இணைந்து பல போராட்டங்களை இடதுசாரிக் கட்சிகள் நடத்தியுள்ளன. இப்போது தேர்தலில் ஒன்றாக நிற்கிறோம். எனவே தேர்தல் வரும்போது இன்றைக்குப் பிரதானமாக 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும்? யார் ஆட்சிக்கு வரக் கூடாது என பார்க்கும்போது இன்று பாஜக அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளைத் தகர்க்க முயற்சி செய்கிறது. அதனை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு கருத்தொற்றுமை தேவை என்பது இயல்பு தானே. இதில் தவறில்லை என்று நினைக்கிறேன். பொதுவான எதிரியை வீழ்த்துவதற்கு கூட்டணி வைப்பது இயல்பானது தானே.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது? நீங்கள் ஆதரவு தெரிவித்தீர்கள். இப்போது நீங்கள் திமுகவோடு கூட்டணி வைத்துள்ளீர்கள்.. இது தொடர்பான உங்கள்மீது எழுந்த விமர்சனங்களுக்கு உங்களது பதில்?
அது சட்டப்பேரவை தேர்தலில். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுவானதாக நாங்கள் பாரப்பது பாஜகவைத் தோற்கடிப்பது. மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்குவது. பொதுவான உடன்பாடுகளில்தான் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. சில விஷயங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளாகவே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதனைத் தவிர்க்க முடியாது.
பாஜகவை வீழ்த்தி தேசத்தைப் பாதுகாப்போம்... அதிமுகவை வீழ்த்தி தமிழகத்தைப் பாதுகாப்போம் என்பதுதான் எங்களது நோக்கமே.
தமிழகத்தில் மக்களது நலனுக்கு எதிரானதாகக் கருதப்படும் நியூட்ரினோ உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டையே இடதுசாரி இயக்கம் வைத்ததே?
எங்களுக்கு இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, மாநிலங்கள் உரிமை, விலைவாசி உயர்வு, வேலையின்மையைத் தீர்ப்பது இப்படிப்பட்ட பிரச்சனைகளில் தான் நாங்கள் கவனம் கொண்டு ஒரு பொதுவான புரிதலில் கூட்டணியில் போட்டியிடுகிறோம். இதுதான் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடினோம்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டோம். சமீபத்தில் பொள்ளாச்சியில் 6 ஆண்டுகளாக பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்து பணம் பறிக்கும் சம்பவம் நடந்தது. இதற்கான விசாரணை சிபிஐக்கு செல்ல வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம். இவ்வாறு மக்களுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி இருக்கிறோம்.
தொடர்ந்து மக்களின் நலனுக்காகப் போராடும் கட்சிகளுடனேயே கூட்டணியும் வைத்துள்ளோம்.
கட்சியில் நிறைய களப்பணியாளர்கள் இருக்கும்போது எழுத்தாளர் சு. வெங்கடேசனை வேட்பாளராக நிறுத்தியதற்கு சிறப்புக் காரணங்கள் உள்ளதா?
எழுத்தாளர் சு. வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சியின் முழு நேர ஊழியர். இதன் அடிப்படையிலும் பரிந்துரையின் அடிப்படையிலுமே அவர் வேட்பாளராக நிற்க வைத்திருக்கிறோம். அவர் சிறந்த எழுத்தாளர்.
எங்கள் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் போராளியாக இருப்பார்கள். தொழிற்சங்கத்தில் இருப்பார்கள். எழுத்தாளராக இருப்பார்கள். மக்கள் மத்தியில் அவர்களுக்காக தேவை, அந்தத் தொகுதியிலும் பரிச்சயம், மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள செல்வாக்கு இதன் அடிப்படையிலேயே பரிந்துரைக்கிறோம். கோவையை எடுத்துக் கொண்டால் கட்சியில் 50 ஆண்டுகளாக முழுநேர ஊழியராக இருக்கக் கூடிய நடராஜனை நிறுத்தி இருக்கிறோம். இரு வேட்பாளர்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.
சமூக வலைதளங்கள்தான் இன்றைய பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரச்சாரத் தளங்களாக உள்ளன. அவை மூலமே இளைய தலைமுறையிடம் பெரும்பாலான கட்சிகள் தங்கள் உரையாடலை முன் வைக்கின்றனர். ஆனால் இதில் இடதுசாரி இயக்கங்களும் அதன் தலைவர்களும் (ஒரு சிலரைத் தவிர) பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்துள்ளீர்களா?
சமூக வலைதளங்களில் எங்களது பங்களிப்பை அளித்து வருகிறோம். எனினும் போதாது என்ற உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
தொலைக்காட்சி, பத்திரிகை, ஊடகங்கள் அந்த வரிசையில் சமூக வலைதளங்களும் ஊடகங்கள் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாக மாறியுள்ளன. இதில் எங்களது பங்களிப்பு இருக்கிறது. எனினும் இதனை மேம்படுத்த நிச்சயம் முயற்சி செய்வோம்.
மோடி தலைமையிலான அரசு ஏன் அகற்றப்பட வேண்டும்? இதில் இடதுடாரிகளின் பங்கு எந்த வகையில் இருக்கப் போவதாக நினைக்கிறீர்கள்?
பாஜக அரசு தோற்கடிக்கப்பட பல காரணங்கள் உள்ளன. எனினும் இதில் இரண்டு முக்கியமான இரண்டு காரணங்களைக் கூறுகிறேன். நாம் எதையெல்லாம் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் அடிப்படை அம்சங்கள் என்று ஏற்றுக்கொண்டோமோ அதை எல்லாம் ஒவ்வொன்றாக தகர்க்கிற முறையில் பாஜக செயல்படுகிறது.
உதாரணத்துக்கு அரசை விமர்சித்தால் அவர்கள் மீது தேச விரோத வழக்கு போடப்படுகிறது. தேச விரோத வழக்கே சுதந்திர இந்தியாவில் பொருத்தமற்றது என்று பல நீதிபதிகள் உத்தரவிட்ட பின்னரும் அதனைப் பயன்படுத்துகிறார்கள்.
இரண்டாவதாக சிஏஜி, ஆர்பிஐ, சிபிஐ, நீதித்துறை உட்பட அனைத்துத் துறைகளையும் தங்களுக்குச் சாதகமாக செயல்படும்படி வளைத்திருக்கின்றனர்.
இந்திய மதச்சார்பின்மையை சீரழித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஐந்து வருடத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் வங்கிகளுக்குச் செலுத்தக் கூடிய கடனை ரத்து செய்தார்கள். இன்னொரு புறத்தில் விவசாயிகளின் கடனை ரத்து செய்யாமல் அவர்களது தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஜிஎஸ்டி, பண மதிப்பிழக்கத்தால் இந்தியப் பொருளாதாரமே சரிந்தது. இவ்வாறு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அரசியல் ரிதீயாகவும் பாஜகவின் ஆட்சி கடைப்பிடித்த அந்தக் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரமே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதன் பின்னணியில்தான் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். ஒரு மதச்சார்பற்ற கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கருதுகிறது.
பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக இடதுசாரிகள் ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் எதிர்காலத்தில் உருவாகுமா?
இன்றைக்கு இருக்கிற நிலைமையில் நவீன தாராமய பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. உலகம் முழுவதும் இன்றைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்று சொன்னால் மார்க்சிய பொருளாதாரக் கொள்கை தேவைப்படுகிறது.
2008-ல் அமெரிக்கா பெரும் நெருக்கடிக்கு உள்ளான போது வாடிகன் போப் ஆண்டவரே கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகத்தை வாசிக்கும்படி கூறினார். இந்த நவீன தாராளமய, பொருளாதாரக் கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் சொல்லக் கூடிய மாற்றுக் கொள்கைகள்தான் பிரச்சினையைத் தீர்க்கும் . இது உடனடியாக சாத்தியமா என்றால்? நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் எதிர்காலம் என்பது இடதுசாரிகளுக்கு என்றுதான் நான் சொல்ல விரும்புகிறேன்.
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT