Published : 16 Mar 2019 10:53 AM
Last Updated : 16 Mar 2019 10:53 AM
கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட திமுகவினர் வருத்தம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய தொகுதிகள் கொண்டதாகும். கடந்த கால தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சி 7 முறை வெற்றிபெற்று, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சின்னபில்லப்பா 2 லட்சத்து 73 ஆயிரத்து 900 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட செல்லக்குமார் 38 ஆயிரத்து 885 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனைக் கணக்கில் கொண்டு, கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் என அக்கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த தொழிலதிபர் டி.மதியழகன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். கிருஷ்ணகிரியில் பிரம்மாண்டமாக இணைப்புவிழா கூட்டம் நடத்திய மதியழகனுக்கு, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அதிகம் பேசப்பட்டது. பிரச்சாரத்திற்கு தேவையான அனைத்து பணிகளும் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக, திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுகவினர் கூறும்போது, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது வருத்தமளிக்கிறது. இருந்தாலும் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல். பிரதமர் வேட்பாளர் என ராகுல்காந்தியை ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம், என்றனர். கிருஷ்ணகிரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 7 முறை வெற்றி பெற்று, அக்கட்சியின் கோட்டையாகவே விளங்கி உள்ளது. குறிப்பாக கடந்த 1951 மற்றும் 1957-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ஆர்.நரசிம்மன் வெற்றி பெற்றார். 1971-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தீர்த்தகிரி கவுண்டர் வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிட்டு 4 முறையும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவினாலும், தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் 8 -வது முறையாக வெற்றி பெற்று, கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழும் என்கின்றனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT