Published : 06 Mar 2019 09:38 AM
Last Updated : 06 Mar 2019 09:38 AM

கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் போட்டி: கேள்விக்குறியாகும் ஜனநாயகம்?

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடப்போகின்றன என்ற விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிடக்கூடும் என்று தெரிகிறது. ஆனால், விசிக எந்தச் சின்னத்தில் போட்டியிடப்போகிறது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஏற்கெனவே திமுக கூட்டணியில் போட்டியிடுவதற்கு ஒரு தொகுதியைப் பெற்றிருக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியும் இந்திய ஜனநாயகக் கட்சியும் திமுகவின் தேர்தல் சின்னத்தில்தான் போட்டியிடப்போகின்றன. எனவே, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அத்தகையதொரு நிர்ப்பந்தம் எழக்கூடும்.

பெரிய கட்சிகள் தரும் அழுத்தம்

சிறிய கட்சிகள் தங்களது சின்னத்தில் போட்டியிட்டால் குறைந்த இடங்களே ஒதுக்கப்படும். அதற்கு மாறாக, கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் தேர்தல் சின்னத்தில் போட்டியிட்டால் அதிகத் தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறலாம் என்று செல்வாக்கு பெற்ற பெரிய கட்சிகள் வலியுறுத்துகின்றன. தனிச் சின்னத்தில் நின்று போட்டியிடுவதா அல்லது அதிக இடங்களைப் பெறுவதா என்ற கேள்விக்கு முன்னால் சிறிய கட்சிகள் தவிர்க்க முடியாத நிலையில் இரண்டாவது தேர்வை நோக்கியே தள்ளப்படுகின்றன.

2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்தது. அப்போது, திமுகவின் தேர்தல் சின்னத்தில் நின்றுதான் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக அவர் பதவியிலிருந்து விலகினார் என்பது இப்போதும் நினைவில் கொள்ளத்தக்கது. 2009 மக்களவைத் தேர்தலின்போதும் 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களின்போதும் தனிச் சின்னத்தில் நின்றுதான் விசிக தேர்தலைச் சந்தித்தது.

திமுக கூட்டணியில் விசிக இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறது என்றால், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகமும் இதே சிக்கலை எதிர்கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிருஷ்ணசாமி எதிர்கொண்ட முக்கியமான கேள்வியே, “நீங்கள் அதிமுகவின் தேர்தல் சின்னத்தில் போட்டியிடப் போகிறீர்களா?” என்பதுதான். மற்ற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தச் சிக்கல்கள் குறித்து விளக்காமல் கவனமாகத் தவிர்க்கவும் செய்தார். புதிய தமிழகம் கட்சி, 1998-லிருந்தே தனிச் சின்னத்தில் போட்டியிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பறிபோகும் கொள்கைப் பிடிப்பு

கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சிகள் தாங்கள் அதிகத் தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும், அந்தப் பெரும்பான்மையின் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று விரும்புகின்றன. தனியாக நின்று தேர்தலைச் சந்தித்தால் தோல்வியடைய நேரலாம் என்ற முன்னுணர்வின் காரணமாகவே அவை தேர்தல் கூட்டணி அமைத்துக்கொள்கின்றன. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட அரசியல் கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக்கொள்கின்றன. இந்நிலையில், பெரிய கட்சிகளின் தேர்தல் சின்னத்தில் சிறிய கட்சிகள் தேர்தலைச் சந்திப்பது என்பது அரசியல் எதிர்காலம் என்பதைத் தாண்டி கொள்கையளவிலும் ஒரு தற்கொலை முயற்சியாகத்தான் அமையும். அவை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மட்டுமே நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ சுயேச்சையாகச் செயல்பட முடியும். தங்களது கட்சியின் கருத்துகளை மன்றத்தில் விவாதிக்க முடியும்.

தேர்தலுக்காகவே அமைகிற கூட்டணிகள் தேர்தல் முடிந்தும் தொடர வேண்டிய அவசியங்கள் ஏதுமில்லை. அத்தகைய நிலையில், பெரிய கட்சிகளின் தேர்தல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிறிய கட்சிகள் தங்களது கொள்கைகளை அடகுவைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். முரண்பாடுகள் எழுந்தாலும்கூட அதை நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ பிரதிபலிக்க முடியாது. எப்படியாவது ஒரு பதவி கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால், இந்தச் சமரசத்துக்கு எளிதில் தலையசைத்துவிடலாம். ஆனால், தனக்கென்று ஒரு தனித்த செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் கட்சிகளுக்கு இது மிகப் பெரிய சாபம்.

இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆதரவளிப்பது தொடங்கி அமைச்சரவையின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரை எதிலும் தனது சொந்தக் கருத்தை வெளிப்படுத்த முடியாது என்பது பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும் சிறிய கட்சிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் துயரம். கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தமும் கட்சித் தாவல் தடைச்சட்டமும் ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதற்குப் பதிலாகக் கேடு பயப்பதற்கே பெரும்பாலும் பயன்பட்டுவருகிறது. கட்சியின் தேர்தல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்கள் அனைவரையும் கொறடாவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆக்குகிறது.

மறுக்கப்படும் சுயமரியாதை

இந்தியாவின் எந்தப் பெரிய கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. நியாயமான கருத்து மாறுபாடு என்றாலும் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் அதை வெளிப்படுத்த முடியாது. பதவி விலகுவது ஒன்றுதான் தீர்வு. அப்படி வீம்பாக வெளியேறுபவர்கள் மீண்டும் தனித்து நின்று வெற்றிபெறுவது என்பதும் இன்றைய தேர்தல் முறையில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் வாயிலாகத் தங்களது பெரும்பான்மையை அடுத்த தேர்தல் வரைக்கும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் பெரிய கட்சிகள், அந்த வலைக்குள் கூட்டணியில் இடம்பெறும் சிறிய கட்சிகளையும் இழுத்துப் போட்டுக்கொள்கின்றன என்பதுதான் உண்மை.

இது ராஜதந்திரமாகக் கணக்கில் கொள்ளப்படலாம். ஆனால், ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது. தமிழகத்தில் இப்படியொரு ஜனநாயக விரோத உத்தியைத்தான் ஜெயலலிதா கடந்த தேர்தல்களில் தொடர்ந்து கையாண்டார் (கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் விதிவிலக்குகள். அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு மற்ற சிறிய கட்சிகளுக்கு அமைவதற்கு வாய்ப்பே இல்லை). ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற திமுகவும் இன்றைக்கு அவரையே பின்பற்றுகிறது. பதவி கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால், இந்தச் சமரசத்துக்கு எளிதில் தலையசைத்துவிடலாம். ஆனால், தனக்கென்று ஒரு தனித்த செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் கட்சிகளுக்கு இது மிகப் பெரிய சாபம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x