Published : 27 Mar 2019 08:24 AM
Last Updated : 27 Mar 2019 08:24 AM
தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை. அதேசமயம், வாக்களிப்பதிலிருந்து தவறவும்; தனது வாக்கை இன்னொருவர் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கவும் விருப்பமில்லை – இப்படியான ஒரு தருணத்தில் வாக்காளர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களுக்கென உருவாக்கப்பட்ட முறைதான் நோட்டா.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் (1961)-ன்படி 49-ஓ எனும் முறை கொண்டுவரப்பட்டது. எனினும், தொடக்கத்தில் வாக்குச் சீட்டுகளிலோ, வாக்குப் பதிவு இயந்திரத்திலோ இதற்கான பொத்தான்கள் சேர்க்கப்படவில்லை. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர், வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்; அதற்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்றெல்லாம் நடைமுறைகள் இருந்தன. இது, வாக்களிப்பதற்கான ரகசியக் கொள்கையை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் 2013-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வாக்குச் சீட்டுகளிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் ‘நோட்டா’ (நன் ஆஃப் தி அபோவ்) வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டது. வேட்பாளர் பட்டியலின் இறுதியில் ‘நோட்டா’ சேர்க்கப்பட்டது. இதன்மூலம், வாக்காளர் நோட்டாவுக்கு வாக்களித்த ரகசியம் காக்கப்படும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. 2013-ல் டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஏற்காடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சம்.
ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் எனும்போது, அதிகபட்சமாக வாக்கு பெற்ற வேட்பாளரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார் என்பதால் நோட்டாவின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் சொல்லிவிட முடியாது!
-ஐசக்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT