Published : 30 Mar 2019 08:44 AM
Last Updated : 30 Mar 2019 08:44 AM
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்கள் சொல்லும் சாக்கு இது: “என்னுடைய ஒரு ஓட்டு இல்லை என்றால், ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.” உண்மையில் ஒரே ஓட்டில் தோற்றுப்போனவர்களை இந்தியத் தேர்தல் களம் பார்த்திருக்கிறது. கர்நாடகத்தில் 2004-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்தேமர்ஹள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துருவ்நாராயணா, மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஒரே ஓட்டில் தோற்கடித்தார். துருவ்நாராயணா 40,752 ஓட்டுகளைப் பெற்ற நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கு 40,751 ஓட்டுகளே கிடைத்தன.
2008 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், நத்வாரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் சி.பி. ஜோஷி களமிறங்கினார். பாஜக சார்பில் கல்யாண் சிங் சவுகான் போட்டியிட்டார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது வாக்கு எண்ணிக்கையில் இருவருக்கும் இடையே பெரும் இழுபறி ஏற்பட்டது. மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஜோஷி காங்கிரஸ் தலைவர் என்பதால், அவர் தேர்தலில் கரை சேருவாரா என்று காங்கிரஸ் தொண்டர்கள் கவலையில் மூழ்கினர். முடிவை ஊகிக்க முடியாத அளவுக்குக் கடுமையாக இருந்தது போட்டி. இறுதியில் ஜோஷி 62,215 வாக்குகளைப் பெற்றார். கல்யாண் சிங் சவுகான் 62,216 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஒரே ஒரு ஓட்டில் ஜோஷியை கல்யாண் சிங் வீழ்த்தினார். ஜோஷியின் தோல்விக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான காரணமும் உண்டு. வாக்குப்பதிவு அன்று ஜோஷியின் அம்மா, மனைவி, கார் ஓட்டுநர் ஆகியோர் தேர்தலில் வாக்குச் சாவடிக்கே வரவில்லை. இவர்கள் மூவரும் ஓட்டு போட்டிருந்தால் ஜோஷி இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். இனி, ஒரு ஓட்டில் என்ன நடக்கும் என்று நினைப்பீர்களா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT