Published : 30 Mar 2019 02:13 PM
Last Updated : 30 Mar 2019 02:13 PM
நாடு சுதந்திரமடைந்து குடியரசு ஆன பிறகு 1951-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல்கள் நடந்து வருகின்றன. 16-வது மக்களவையின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த ஆண்டு (2019) மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக இந்த தேர்தல்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை 2-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தல்களும் முடிந்து மே 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலை பொறுத்தவரை இந்திய அளவில் சற்று வித்தியாசமான சூழல். 2014-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டில் அமர்ந்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. கட்சிகளின் செயல்பாடு, திட்டங்கள், நடவடிக்கைகள் என்பதை தாண்டி, பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தல் நடைபெறுகிறது.
மோடியின் செயல்பாடுகளை ஆதரித்தும், எதிர்த்தும் வாக்கு கேட்கும் சூழல் உள்ளது. இதனால் கட்சி அரசியலை விடவும், தனிநபரின் நடவடிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் வித்தியாசமான தேர்தலாக அமைந்துள்ளது.
இந்தியா முழுமைக்கும் தனிநபரை மையப்படுத்தி தேர்தல் நடைபெறுகிறது என்றால், தமிழகத்தில் இன்னும் வித்தியாசம். ஜெயலலிதா, கருணாநிதி என்ற மிகப்பெரிய ஆளுமைகளின் மரணத்துக்கு பிறகு அந்தந்த கட்சிகளில் புதிய தலைமைகள் பொறுப்பேற்றுள்ளன. எனவே அவர்களின் தலைமைக்கான பரிசோதனையாகவும் இந்த மக்களவைத் தேர்தல் களம் அமைந்துள்ளது.
இதுமட்டுமின்றி, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தனியாக தடம் பதிக்க முயலுகிறது. அவரது ஆளுமைக்கும் இது சோதனை களம் என கூறலாம். தனியாக கட்சியாக பதிவு செய்யாத நிலையில் சுயேச்சையாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதேசமயம் போட்டியடும் மக்களவைத் தொகுதிகள் மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரே சின்னமாக பரிசு பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறது.
இதுமட்டுமின்றி நடிகர் கமல்ஹாசன் புதிதாக தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் செல்வாக்கையும் உரைத்து பார்க்கும் உரைகல்லாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இடம் பிடித்துள்ளன. இதனால் மீண்டும் ஒருமுறை கூட்டணிகள் மோதும் தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறகிறது. 3 தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. எனவே சட்டப்பேரவையில் அறுதி பெரும்பான்மையை நிருபிக்கும் தேர்தல் என்பதால் இது மினி சட்டப்பேரவைத் தேர்தலாக வர்ணிக்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள், மக்களவைத் தேர்தலைவிடும் இந்த 18 தொகுதிகளின் இடைத் தேர்தலை ஆர்வத்துடன் களம் இறங்குகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT