Last Updated : 06 Mar, 2019 08:16 AM

 

Published : 06 Mar 2019 08:16 AM
Last Updated : 06 Mar 2019 08:16 AM

திமுகவில் தொகுதி பங்கீடு முடிந்தது; வேட்பாளர்கள் தேர்வில் ஸ்டாலின் தீவிரம்: வாரிசுகளுக்கு வாய்ப்பு கேட்கும் நிர்வாகிகள்

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள், மூத்தநிர்வாகிகள் பலரும் தங்களது வாரிசுகளுக்கு சீட் வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக), இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்க முடியாத நிலையில் இருப்பதாக ஸ்டாலின் கூறினார்.

மற்ற 20 தொகுதிகளில் திமுகபோட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளில் கொமதேக, ஐஜேகே ஆகியவை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. மதிமுக (1), விசிகவையும் (2) உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருகிறது. அவர்கள் ஒப்புக்கொண்டால், 25 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களத்தில் இருக்கும்.

இதற்கிடையில், 20 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைவர் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

போட்டியிடுவது உறுதி

தூத்துக்குடியில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, ஸ்ரீபெரும்புதூரில் திமுக முதன்மைச்செயலாளர் டி.ஆர்.பாலு, மத்திய சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நீலகிரியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வட சென்னையில் திமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இரா.கிரிராஜனை நிறுத்த ஸ்டாலின் விரும்புகிறார். தவிர, அதிக தொகுதிகளில் புதுமுகங்கள் அதுவும் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் விரும்புகிறார்.

வாய்ப்பு கேட்பதால் சிக்கல்

ஆனால், பல தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு கேட்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

கருணாநிதி குடும்பத்தில் கனிமொழி, தயாநிதி மாறன் போட்டியிட உள்ளனர். திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். அவருக்கு வாய்ப்பு கிடைப்பது உறுதி எனக் கூறப்படுகிறது.

அதுபோல திமுக உயர்நிலைசெயல்திட்டக் குழு உறுப்பினர்களான க.பொன்முடி தனது மகன்கவுதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சியையும், எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கு திருவண்ணாமலை தொகுதியையும் கேட்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களது வாரிசுகளுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியின் தம்பி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மூத்த திமுக நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ‘‘திமுகவில் ஏற்கெனவே டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி என பலரது வாரிசுகள் எம்எல்ஏக்களாக உள்ளனர். மக்களவைத் தேர்தலிலும் வாரிசுகளுக்கு பலர் வாய்ப்பு கேட்டுள்ளனர். இதனால் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு பறிபோகும். இதில் ஸ்டாலின் கவனம் செலுத்தி புதுமுகங்கள், இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு தர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x