Published : 06 Mar 2019 08:23 AM
Last Updated : 06 Mar 2019 08:23 AM

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாததால் திமுக, அதிமுகவுக்கு பரிசோதனை தேர்தல்- காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களும் இல்லாத இந்த மக்களவைத் தேர்தல் திமுக, அதிமுகவுக்கு பரிசோதனையான தேர்தலாக இருக்கும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழருவி மணியன், ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இல்லாத இந்த தேர்தல் எப்படி இருக்கும்?

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பெரிய ஆளுமைகள் இல்லாமல் நடக்கிற முதல் பொதுத்தேர்தல் இது. மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான பரிசோதனைக் காலம். ஜெயலலிதாவை இழந்திருக்கும் அதிமுகவும் தொடர்ந்து நீடித்து நிற்பதற்கான கட்டாயம் இருக் கிறது. எனவே, இரு கட்சிகளுக்கும் பரிசோதனையாகவும், முக்கிய திருப்புமுனை ஏற்படுத்தும் தேர்தலாகவும் இத்தேர்தல் இருக்கும்.

முதல்வர் பழனிசாமியின் 2 ஆண்டுகால ஆட்சி நிறைவு குறித்து..

தமிழகம் மாறி மாறி சந்தித்துவரும் திமுக - அதிமுக ஊழல் மலிந்த ஆட்சியின் தொடர்ச்சியாக இந்த அரசும் இருக்கிறது. பாஜக பின்புலத்தில் இருந்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசு.

திராவிடக் கட்சிகளுடன் இனிமேல் கூட்டணி இல்லை என்று கூறிய பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதே?

பாமக தனியாக தேர்தலை சந்தித்த போது, மக்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந் தனர். அன்புமணி மீது ஓரளவு நம்பிக்கை ஏற்படும் நேரத்தில், அதிமுகவுடன் பாமக திடீரென கூட்டணி சேர்ந்துள்ளது. பதவி பெறுவதையும், அதிகாரத்தை சுவைப்பதையும் தவிர, பாமகவுக்கு மக்கள் நலன்சார்ந்த வேறு எந்த நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.

மத்திய பாஜக ஆட்சி குறித்து..

பிரதமர் மோடி நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார். இந்த நல்ல திட்டங்கள் மக்களிடம் சென்று சேருவதை, ‘ஒரே இனம், ஒரே தேசம், ஒரே மொழி’ போன்ற பாஜகவின் நடவடிக்கைகள் முழுவதுமாக மறைத்துவிடுகின்றன. எனினும், வரும் தேர்தலிலும் பாஜகதான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.

‘மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை’ என்று கூறியுள்ள ரஜினிகாந்த் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறாரா?

ஆம். தமிழக அரசியலில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல், வரும் சட்டப்பேரவை தேர்தலை ரஜினி சந்திக்க உள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற மாற்று அரசியலைக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான அடித்தளக் கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x