Last Updated : 20 Mar, 2019 07:27 PM

 

Published : 20 Mar 2019 07:27 PM
Last Updated : 20 Mar 2019 07:27 PM

காவிரி டெல்டா கள நிலவரம்: செல்வாக்கை நிரூபிக்கப் போவது யார்?

காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் பல தேர்தல்களில் திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வென்றுள்ளன. தென் மாவட்டங்களைப் போலவே, இந்தப் பகுதியிலும் தினகரனின் அமமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் மிக முக்கியமான பகுதியான காவிரி டெல்டா அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தின் பண்பாட்டு பதிவுகளைத் தாங்கி நிற்கும் அடையாளங்களில் ஒன்று தஞ்சாவூர். சமையல் தொடங்கி, இயல், இசை, நாடகம் என முத்திரை பதித்த மண் இது. கலைகள் செழித்தோங்கி வளர்ந்த தஞ்சை தமிழகத்தின் செழுமையான கலாச்சாரத்தைத் தாங்கி நிற்கிறது.

மிக நீண்டகாலமாகவே மாற்று அரசியல், திராவிட இயக்க அரசியல், இடதுசாரி அரசியல் என அனைத்துக்கும் ஆதரவு தரும் பகுதியாக இருந்து வந்துள்ளது. பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் விவசாயமே இந்தப் பகுதியின் உயிர் மூச்சு.

சமீபகாலமாக ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். காவிரி டெல்டா பகுதி காவிரி நீருக்காக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அதிகமாகக் கொண்ட பகுதி.

இந்தப் பகுதியின் அரசியலைப் பொறுத்தவரையில், இத்தொகுதியில் அதிமுக, திமுக மட்டுமின்றி, இடதுசாரி கட்சிகளுக்கும் வலிமையான வாக்கு வங்கி உண்டு. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை என 3 மக்களவைத் தொகுதிகள் இப்பகுதியில் உள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் இங்குள்ள 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. எனினும் மற்ற பகுதிகளில் நடந்ததுபோல பாஜக கூட்டணி எந்தத் தொகுதியிலும் 2-வது இடத்தை பிடிக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட நிலையில் நாகை தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். 

மயிலாடுதுறை தொகுதி

மயிலாடுதுறை தொகுதியில் நீண்டகாலமாகவே காங்கிரஸ் வென்ற தொகுதி. அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வென்ற தொகுதி. எனினும் அதிமுகவுக்கும் ஒரளவு வாக்கு வங்கியுள்ள தொகுதி இது. மயிலாடுதுறையில் இந்த முறை அதிமுக சார்பில் ஆசைமணியும், திமுக சார்பில் சே.ராமலிங்கமும் போட்டியிடுகின்றனர். இரு கூட்டணியிலும் பலமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இந்தத் தொகுதியில் இந்தமுறை அதிமுக, திமுக நேரடியாக களம் காண்கின்றன.  

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்: மயிலாடுதுறை

 

அதிமுகபாரதி மோகன்

5,13,729

 

மனிதநேய மக்கள் கட்சிஹைதர் அலி  

2,36,679

 

பாமக    அகோரம் 

1,44,085

 

காங்மணிசங்கர் அய்யர்  

58,465

 

 

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் மயிலாடுதுறை, பாபநாசம், சீர்காழி, பூம்புகார் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வென்றது. கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.

 

நாகை தொகுதி:

நாகை மக்களவைத் தொகுதியில் திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு அதிக செல்வாக்கு உண்டு. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் இந்த மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இங்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்: நாகை தொகுதி

 

அதிமுக  கோபால் 

4,34,174

 

திமுகவிஜயன்

3,28,095

 

சிபிஐபழனிசாமி

90,313

 

பாமகவடிவேல் ராவணன்

43,506

 

காங்கிரஸ்செந்தில்பாண்டியன்23,967

 

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம், வேதாரண்யம், நன்னிலம் தொகுதிகளில் அதிமுக வென்றது. கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் தொகுதிகளில் திமுக வென்றது.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மோதுகின்றன. அதிமுக சார்பில் சரவணனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜூம் போட்டியிடுகின்றனர்.தினகரனின் அமமுகவும் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடும் என கருதப்படுகிறது.

தஞ்சாவூர் தொகுதி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில், திமுகவின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் 5 முறை தொடர்ச்சியாக வென்ற தொகுதி இது. திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியே நேரடியாக களம் கண்டுள்ளது. இந்த முறையும் அதே கட்சி, அதே வேட்பாளர். ஆனால் தற்போது அதிமுக போட்டியிடவில்லை. அக்கூட்டணியில் தமாக வேட்பாளர் நடராஜன் போட்டியிடுகிறார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்: தஞ்சாவூர்

அதிமுக  பரசுராமன்5,10,307   
திமுகடி.ஆர்.பாலு    3,66,188
பாஜகமுருகானந்தன்58,521
காங்கிரஸ்கிருஷ்ணசாமி வாண்டையார்30,232
சிபிஎம்தமிழ்செல்வி        23,215

 

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி  தொகுதிகளில் அதிமுக வென்றது. திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி தொகுதிகளில் திமுக வென்றது.

இந்த 3 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு பாரம்பரியமாக சற்று அதிகமான வாக்கு வங்கி உண்டு. அதேசமயம் குறிப்பிட்ட பகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு உண்டு. எனினும் அமமுக இங்கு கணிசமான வாக்குகளைப் பெறும் என கருதப்படும் நிலையில் அது முக்கியத்துவம் பெறுகிறது. சொந்த ஊரான டெல்டா மாவட்டங்களில் தினகரன் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x