Published : 21 Mar 2019 08:04 AM
Last Updated : 21 Mar 2019 08:04 AM
தமிழகத்தின் அருகே இருந்தாலும் புதுச்சேரியின் கலாச்சாரம், பண்பாடு தொடங்கி அரசியல் வரை பல விஷயங்களில் கணிசமான வேறுபாடு உண்டு. பிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு கீழ் இருந்த புதுச்சேரிக்குத் தற்போதும் பிரெஞ்சு தொடர்புகளே அதிகம். இன்றைக்கு இந்தியாவின் ஒன்றியப் பிரதேசங்களுள் ஒன்றாக இருக்கும் புதுச்சேரி, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது 1954-ல்தான். தமிழகத்தில் 4-வது மக்களவைத் தேர்தல் நடந்தபோதுதான் புதுச்சேரியில் முதல் தேர்தலே நடந்தது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி, காரைக்கால் ஆகியவை தமிழகத்தின் அருகிலும், மாகே கேரளத்தையொட்டியும், ஏனாம் ஆந்திரம் அருகிலும் அமைந்துள்ளன.
பொருளாதாரத்தின் திசை: மீன்பிடித்தொழில், சுற்றுலா, உணவு விடுதி, மதுபான விற்பனையே முக்கிய வருவாய் ஈட்டும் தொழில்கள். மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று 2007-ல் புதுச்சேரி அரசு தனிக் கணக்கு தொடங்கியது. அப்போது மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டியிருந்த ரூ.3,400 கோடி தள்ளுபடி செய்யப்படவில்லை. இது கடன் சுமைக்கு முக்கியக் காரணம். புதுச்சேரியின் தற்போதைய பட்ஜெட் ரூ. 6,945 கோடியாகும். இதில் ரூ. 4 ஆயிரம் கோடியை மாநில அரசு வசூலிக்கிறது. மீதமுள்ள நிதிக்குப் பதிலாக மத்திய அரசு கடந்த இரு ஆண்டுகளாக ரூ.576 கோடிதான் வழங்குகிறது. மீதமுள்ள ரூ. 2,500 கோடிக்கு வெளிமாநிலங்களிடமும் நபார்டு, ஹெட்கோவிடமிருந்தும் கடன் பெறப்படுகிறது. பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றின் பாதிப்புகள் புதுச்சேரியிலும் உண்டு. பத்திரப்பதிவுக்குக் கிடைக்க வேண்டிய வரியும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: புதுச்சேரியில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வு தமிழகத்தைவிட அதிகரித்தே வருகிறது. நிதிப் பற்றாக்குறை, தொழிற்சாலைகள் மூடல், பத்தாயிரம் அரசு சார்பு, கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியமில்லை எனப் பல்வேறு பிரச்சினை களில் அரசும் மக்களும் சிக்கித் தவிக்கின்றனர். வேலைவாய்ப்பின்மையும் கடன் சுமையை மேலும் அழுத்துகின்றன. அரசு பல முறை மத்திய அரசைச் சந்திக்கச் சென்றும் உதவவில்லை என்று புதுச்சேரி முதல்வர் குற்றம்சாட்டுகிறார். அதேநேரத்தில் மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி அரசு சரியாகச் செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த தேர்தலின்போது புதுச்சேரி முதல்வருக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையில் மோதல் நிலவிவந்தது. இந்த முறை முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் விஸ்வரூபமெடுத்துள்ளது.
நீண்டகாலக் கோரிக்கைகள்: மத்திய அரசை நம்பி வாழும் சூழலே புதுச்சேரியின் பிரதானப் பிரச்சினை. புதுச்சேரி சட்டமன்றத்தில் மாநில அந்தஸ்து கேட்டுப் பல முறை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கையில்லை. கிழக்குக் கடற்கரைச் சாலை ரயில் திட்டம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. அரும்பார்த்தபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நிலுவையில் இருக்கிறது. மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைவிட, மத்திய அரசு நியமிக்கும் துணைநிலை ஆளுநருக்கே இங்கு அதிகாரம். இதனால், மக்கள் வாக்குக்கு மதிப்பில்லை எனும் சூழல் வெளிப்படையாகியுள்ளது. முக்கியமான பஞ்சாலையான ஏஎப்டி மில்லை இயக்கினால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கும். செயல்படாமல் உள்ள அந்த ஆலையை முற்றிலுமாக மூடுவதிலேயே அதிகாரத்தில் இருப்பவர்கள் குறியாக இருப்பதாக மக்கள் குமுறுகிறார்கள்.
ஒரு சுவாரஸ்யம்: கடந்த 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரி அரசியலில் பல திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ரங்கசாமி. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில்
என்.ஆர். காங்கிரஸ் கட்சியானது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வென்றது. ஆனால், ரங்கசாமியோ, ஜெயலலிதாவைச் சந்திக்காமல் இருந்ததுடன், தனியாக ஆட்சியும் அமைத்தார். கூட்டணியும் முடிவுக்கு வந்தது. இன்றைக்கோ நிலைமை தலைகீழ். கடுமையாக விமர்சித்த அதிமுகவுடன் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: புதுச்சேரியில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். இதையடுத்து பட்டியலினத்தவர்கள், மீனவர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை இங்கு கட்சியையும், வேட்பாளரையும் பொறுத்தே மக்கள் வாக்களிக்கின்றனர். சாதிக் கணக்கெல்லாம் அப்புறம்தான். சட்டமன்றத் தேர்தல் என்றால் கட்சியுடன் தனிநபர் செல்வாக்கும் மிகவும் முக்கியம். வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்யும் மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று எனத் தேர்தல் ஆணையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது!
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: புதுச்சேரியில் இதுவரை 13 மக்களவைத் தேர்தல்களே நடந்துள்ளன. அதில் 9 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. தலா ஒரு முறை
என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக வென்றுள்ளன. காங்கிரஸில் போட்டியிட்ட சண்முகமும், பாரூக்கும் தலா மூன்று முறை எம்பிக்களாக இருந்துள்ளனர்.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 9,59,785
ஆண்கள் 4,53,362
பெண்கள் 5,06,330
மூன்றாம் பாலினத்தவர்கள்: 93
மக்கள்தொகை எப்படி?
மொத்தம் 12,47,953
ஆண்கள் 6,12,511
பெண்கள் 6,35,442
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள்: 87.3%
முஸ்லிம்கள்: 6.1%
கிறிஸ்தவர்கள்: 6.4%
எழுத்தறிவு எப்படி?
ஆண்கள் 91.26%
பெண்கள் 80.87%
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT