Published : 18 Mar 2019 03:50 PM
Last Updated : 18 Mar 2019 03:50 PM
நாடாளுமன்ற வேட்பாளராக தன்னை அறிவிக்காததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீரென திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம் விரைவில் அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். எஸ்.கண்ணப்பன் என்று அழைக்கப்பட்டவர் பின்னர் நியுமராலஜிப்படி ராஜகண்ணப்பன் எனப் பெயரை மாற்றிக்கொண்டார். திருப்பத்தூர் தொகுதியில் 91-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அவர், 1991-ம் ஆண்டிலிருந்து 96–ம் ஆண்டுவரை அதிமுகவில் அமைச்சராக இருந்தார்.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்து செல்வாக்கு பெற்ற அமைச்சராக ராஜகண்ணப்பன் இருந்தார் என்றால் மிகையாகாது. அதிமுகவின் மூன்று முக்கியப் பொறுப்புகளில் அவர் அமைச்சராக அமர்த்தப்பட்டிருந்தார். ஒரே நேரத்தில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் இருந்தார். 96 தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்குப் பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகினார்.
பின்னர் மக்கள் தமிழ்தேசம் என்கிற கட்சியைத் தொடங்கினார். 2001 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். 2006-ம் ஆண்டு தனது கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார். 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார்.
2009-ம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதிக்காக விருப்ப மனு அளித்திருந்தார்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மூன்றில் ஏதாவது ஒரு தொகுதியை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார். ராமநாதபுரத்தில் இவருக்குப் போட்டியான அன்வர்ராஜா விலகிய நிலையில் தொகுதி அமைச்சர் மணிகண்டனும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தொகுதியை பாஜகவுக்குக் கொடுத்தது அதிமுக தலைமை.
இதேபோன்று சிவகங்கை தொகுதியை எதிர்பார்த்த நிலையில் அந்தத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதுரையில் ராஜன் செல்லப்பாவின் மகனும் ஐடிவிங் நிர்வாகியுமான ராஜன் சத்யாவுக்கு ஒதுக்கப்பட்டதால் ராஜகண்ணப்பன் கடும் அதிருப்தி அடைந்தார். எளிதாக வெல்லும் ராமநாதபுரம் தொகுதியை பாஜகவுக்கு தாரைவார்த்து ராஜகண்ணப்பனை ஒதுக்கியதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தனக்கு சீட்டு கொடுக்காத அதிமுகவிலிருந்து விலகும் முடிவை ராஜகண்ணப்பன் எடுத்துள்ளார். அதன் முதற்கட்டமாக திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இன்று மாலை அவர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க உள்ளார். அவர் திமுகவில் இணைவாரா? அல்லது மீண்டும் மக்கள் தமிழ் தேசத்தைத் தொடங்கி திமுகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவாரா? என்பது போகப்போகத்தெரியும்.
ஏற்கெனவே திமுகவிலிருந்து போட்டியிட்டு வென்று பின்னர் மீண்டும் அதிமுகவுக்குப் போனதால் திமுக தலைமை அவரை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்திருந்துத்தான் பார்க்கவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT