Published : 21 Mar 2019 07:58 AM
Last Updated : 21 Mar 2019 07:58 AM

மீண்டும் வென்ற காங்கிரஸ்!

இரண்டாவது பொதுத் தேர்தல் 1957 பிப்ரவரி 24-ல் தொடங்கி ஜூன் 9 வரை நடந்தது. மக்களவைக்கும் பல மாநில சட்டப் பேரவைகளுக்கும் சேர்ந்தே தேர்தல் நடந்தது. மக்களவைக்குப் புதிதாக ஐந்து தொகுதிகள் சேர்க்கப்பட்டன. 1956 நவம்பர் 1-ல் மொழிவாரி மாநிலங்கள் உதயமாயின. தமிழ்நாட்டிலிருந்து மலபார் மாவட்டம் கேரளத்துடனும் குடகு, கொள்ளேகால் பகுதிகள் மைசூரு மாகாணத்துடனும் சேர்க்கப்பட்டன. கேரளத்துடனிருந்த கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த தேர்தல் என்பதால் இந்தத் தேர்தலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு.

காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் 47.8% வாக்குகளைப் பெற்று 371 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. நேரு உத்தர பிரதேசத்தின் புல்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றார். 27 இடங்களில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரிய எதிர்க்கட்சியானது. அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்

எஸ்.ஏ. டாங்கே எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார். அவர் மும்பை மத்தியத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார்.

பிரஜா சோஷலிஸ்ட் கட்சிக்கு 19 இடங்கள் கிடைத்தன. நாடு முழுக்க சுயேச்சைகளுக்கு 19.3% வாக்குகள் கிடைத்தன. அவர்கள் 42 தொகுதிகளைக் கைப்பற்றினர். அம்பேத்கர் தொடங்கிய ‘பட்டியல் இனத்தவர் சம்மேளனம்’ கட்சி 6 தொகுதிகளைப் பெற்றது. பின்னாளில் இக்கட்சி குடியரசுக் கட்சி என்று பெயரை மாற்றிக்கொண்டது. மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 47.8% காங்கிரஸுக்குக் கிடைத்தது. அதற்கு முந்தைய தேர்தலில் 45% வாக்குகள் கிடைத்தன. 27 இடங்களில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்ததைப் போல ஐந்து மடங்கு வாக்குகள் காங்கிரஸுக்குக் கிடைத்தன.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 151 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. முதல்வர் பதவியில் காமராஜர் தொடர்ந்தார். 58 இடங்களில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி நான்கு தொகுதிகளில் வென்றது. 23 இடங்களில் போட்டியிட்ட பிரஜா சோஷலிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்தான் கிடைத்தன. தேர்தலில் போட்டியிட்ட 602 சுயேச்சைகளில் 48 பேர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x