Published : 24 Mar 2019 10:31 AM
Last Updated : 24 Mar 2019 10:31 AM

திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரம்;  அப்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தாரா?- ஸ்டாலின் கேள்வி

திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி அரங்கேறியுள்ளது. அப்போது ஜெயலலிதா உயிரோடு தான் இருந்தாரா என்பது தான் நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மு.க .ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஒரு தேர்தல். அந்தத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த போஸ் என்பவர் எம்.எல்.ஏவாகத் தேர்வு செய்யப்பட்டு, அதன்பிறகு அந்தப் பணியில் இருந்த பொழுது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். ஆகவே, இடைத்தேர்தல் நடைபெற்ற நேரத்தில் அவர் வெற்றி பெற்றது, பிரச்சினைக்குரியதாக நீதிமன்றத்திற்குச் சென்றது.

என்ன அந்தப் பிரச்சினை? அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலம் குன்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர். வேட்பாளரை அறிவித்து விட்டது அந்தக் கட்சி. ஆனால் சின்னத்தை ஒதுக்குகின்ற நேரத்தில் அந்தக் கட்சியின் தலைவரோ அல்லது பொதுச் செயலாளரோ, அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டுத் தர வேண்டும். உதயசூரியன் சின்னத்தை எங்களின் கட்சி வேட்பாளருக்கு நீங்கள் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு ஒரு படிவத்தில் பூர்த்தி செய்து அதில் பொதுச்செயலாளராக இருக்கக்கூடியவரோ அல்லது தலைவராக இருக்கக் கூடியவரோ அல்லது யார் கையெழுத்து போட வேண்டும் என்ற விதிமுறை இருக்கின்றதோ அதனடிப்படையில் கையெழுத்திட வேண்டும். 

அதிமுகவில் முதல்வராக இருந்த ஜெயலலிதா கையெழுத்து போட வேண்டும். அவரால் கையெழுத்து போட முடியவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்ற காரணம் வெளியில் வருகின்றது. பிறகு என்ன நடந்தது கட்டை விரலில் கைரேகை இடப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் நம்முடைய கழகத்தின் சார்பில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்த டாக்டர் சரவணன், தேர்தல் முடிவு வந்ததற்குப் பிறகு நீதிமன்றத்தை நாடினார். 

முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை அல்ல இது. எனவே இதனை எதிர்த்து நீதிமன்றம் தீர்ப்பு தரவேண்டும், அவரின் எம்.எல்.ஏ பதவி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்றது. நடந்ததற்கு பிறகு நேற்றைய தினம் தீர்ப்பு வந்தது. என்ன தீர்ப்பு என்றால், இது ஜெயலலிதாவின் கைரேகை அல்ல இதை எப்படி தேர்தல் கமிஷன் அனுமதித்தது? உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தருகின்ற பொழுது இன்னொன்றையும் சொல்லி இருக்கின்றார்கள்.

அன்றைக்கு தமிழ்நாட்டின் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ். அவருடைய பெயரைச் சொல்லி இப்படி சொல்கின்றார்கள், mouth piece of ruling party. அதாவது, ஆளும் கட்சியான அதிமுகவின் ஊதுகுழலாக அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி செயல்பட்டு இருக்கின்றார் என்று உயர் நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வெளி வந்துள்ளது. நான் கேட்கின்றேன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெற்ற நேரத்திலேயே ஜெயலலிதா உண்மையில் உயிரோடு இருந்தாரா என்ற அந்த சந்தேகம் இப்பொழுது வருகின்றதா? வரவில்லையா? அதனால்தான் நான் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்கின்றேன். முறையான விசாரணை வேண்டும். இதே கருத்தை ஓ.பி.எஸ் சொன்னார். எப்பொழுது சொன்னார் தெரியுமா தன்னுடைய பதவி போன பின்பு சொன்னார். அதன் பின் நடந்த நாடகங்கள் அனைத்தையும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

இன்றைக்குச் சொல்கிறேன், திமுக ஆட்சி அமைந்தவுடன் நாங்கள் செய்யப்போகின்ற முதல் வேலை, முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமானவர்களை சிறைக்குள் தள்ளுவதே எங்கள் முதல் வேலை''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x