Published : 25 Mar 2019 05:21 PM
Last Updated : 25 Mar 2019 05:21 PM
அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தனது முடிவை திடீரென மாற்றிக்கொண்டார். அவர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறினார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தென்காசி மக்களவைத் தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி இணைந்தார். தொகுதிப் பங்கீடு முடிந்து, தென்காசி மக்களவைத் தொகுதி அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது, தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக கிருஷ்ணசாமி அறிவித்தார்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான பூ.முத்துராமலிங்கத்திடம் இன்று (திங்கள்கிழமை) கிருஷ்ணசாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தென்காசி மக்களவைத் தொகுதியில் நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக வருவார்.
தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். முதல்வர் பழனிசாமி ஆட்சி தொடர்ந்து நடைபெறும். 2021-ம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பழனிசாமி தமிழக முதல்வராக மீண்டும் ஆட்சி அமைப்பார்.
தென்காசி தொகுதியில் மகத்தான வெற்றி பெற்று, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தென் தமிழகத்தின் முகவரியை மாற்றி அமைப்பேன்''.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
சீட் வாங்கும் போது தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறிய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட காரணம் தோல்வி பயமா என்று கேட்டபோது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடுத்த முடிவின்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். வேறு எதுவும் காரணமல்ல. இன்னும் ஆளுமையாக செயல்படத்தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT