Published : 24 Mar 2019 09:10 PM
Last Updated : 24 Mar 2019 09:10 PM
ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான 17-வது பொதுத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அக்கட்சியின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுகிறார்.
அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை மதிமுக இழந்ததால் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. குறைந்த கால அவகாசத்தில் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகம் செய்வது கடினம் என்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கேட்டுக் கொண்டது. இதனை பரிசீலித்து முடிவெடுப்பதாக வைகோவும் கூறியிருந்தார். இது தொடர்பாக மதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வந்தார்.
இந்நிலையில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். ஆனால், வெற்றியே இலக்கு என்பதால் மதிமுக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதை பேட்டியிலும் தெரிவித்தார்.
இந்த சூழலில் ஈரோடு மொடக்குறிச்சியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக மதிமுக அறிவித்துள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது தவிர இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் (பெரம் பலூர்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் (நாமக்கல்), விசிக வேட்பாளர் டி.ரவிகுமார் (விழுப்புரம்), மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி (ஈரோடு) ஆகியோர் திமுகவின்உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். மொத்தம் 24 தொகுதிகளில் உதயசூரியன் களத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT