Published : 20 Mar 2019 09:11 AM
Last Updated : 20 Mar 2019 09:11 AM
அதிமுக, திமுக வேட்பாளர்பட்டியலில் வாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் இருகட்சிகளும் மொத்தம் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு தந்துள்ளன.
அதிமுக 20 தொகுதிகள், அதன் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேபோல, திமுக 20 தொகுதிகள், அதன் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அதிமுக, திமுக இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டன. திமுகவில் கருணாநிதி மகள் கனிமொழி (தூத்துக்குடி), பேரன் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் (வேலூர்), முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி மகன் கவுதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி (வட சென்னை), தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய 6 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ப.ரவீந்திரநாத் குமார் (தேனி), சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் மகன் பி.எச்.மனோஜ் பாண்டியன் (திருநெல்வேலி), அமைச்சர் டி.ஜெயக்குமார் மகன் ஜெ.ஜெயவர்தன் (தென் சென்னை), எம்எல்ஏ ராஜன்செல்லப்பா மகன் விவிஆர் ராஜ்சத்யன் (மதுரை) ஆகிய 4 வாரிசுகளுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ்கனி (ராமநாதபுரம்) போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் இல்லை. அதிமுக, திமுக கட்சிகளைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
திருநெல்வேலியில் சீட் வழங்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் பி.எச்.மனோஜ் பாண்டியன், திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம் ஆகிய இருவரும் கிறிஸ்தவர்கள். மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால் கிறிஸ்தவர்.
இரு கூட்டணியிலும் தனி தொகுதிகள் தவிர பொதுத் தொகுதிகளில் தலித்கள் நிறுத்தப்படவில்லை.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று அதிமுக, திமுக இரு கட்சிகளும் பேசுகின்றன.
ஆனால் திமுக 20 தொகுதிகளில் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் என 2 பெண்களுக்கு (அவர்களும் வாரிசுகள்), அதாவது, 10 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கியுள்ளது. அதிமுகவின் ஒரே பெண் வேட்பாளர் மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்) மட்டுமே. இது 5 சதவீத இடஒதுக்கீடு ஆகும்.
திமுக கூட்டணி வேட்பாளர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், சு.வெங்கடேசன், டி.ரவிகுமார் ஆகிய 4 பேர் எழுத்தாளர்கள்.
அதிமுக அணியில் எழுத்தாளர்கள் யாரும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT