Published : 28 Feb 2019 08:22 AM
Last Updated : 28 Feb 2019 08:22 AM
விருதுநகரில் மார்ச் 6-ம் தேதி நடைபெறும் திமுக தென் மண்டல மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில், மார்ச் 6-ம் தேதி மாலை விருதுநகர்- சாத்தூர் நான்கு வழிச் சாலையில் மருளூத்து அருகே உள்ள 85 ஏக்கரில் தென் மண்டல மாநாடு நடத்த திமுக ஏற்பாடு செய்து வருகிறது. இதில் பங்கேற்க விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் தொண்டர்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் பேர் என மொத்தம் 2 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டுக்கான அனைத்துப் பணிகளையும் மாவட்டச் செயலர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, தங்கம்தென்னரசு எம்எல்ஏ ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். 2004-ம் ஆண்டு திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதி தலைமையில் விருதுநகரில் இதேபோன்று நடத்தப்பட்ட தென் மண்டல மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது.
அதே சென்டிமென்ட் தற்போதும் கைகொடுக்கலாம் என்ற நம்பிக்கையில், இம்முறை மக்களவைத் தேர்தலையொட்டி தென் மண்டல மாநாடு நடத்தப்படுகிறது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு மற்றும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரங்கள், திமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல் உள்ளிட்டவற்றை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அது நாடு முழுவதும் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் திமுகவினர் கூறுகின்றனர். மார்ச் 7-ம் தேதி மக்களவைத் தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முந்தைய நாளில் இந்த தென் மண்டல மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT