Published : 22 Feb 2019 10:55 AM
Last Updated : 22 Feb 2019 10:55 AM

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம்; மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமகவுடன் பேச்சுவார்த்தை: தலா 2 தொகுதிகளை கேட்பதால் இழுபறி

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நேற்று தொடங்கியது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. முதல்கட்டமாக நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நேற்று தொடங்கியது.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

திமுக சார்பில் தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, மதுரை ஆகிய 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் வேண்டும். 2 தொகுதிகளுக்கு குறைந்தால் ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஏற்காத துரைமுருகன், திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. மோடி அரசை வீழ்த்த தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிக்க வேண்டியுள்ளது. எனவே, ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடியும் என கூறியுள்ளார். இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், ''தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் நடந்த முதல்கட்ட பேச்சு சுமுகமாக இருந்தது. மார்க்சிஸ்ட் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தெரிவித்துள்ளோம். திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேசி இறுதி முடிவு எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர். எந்த முடிவும் ஏற்படாத நிலையில் எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பதை தெரிவிக்க முடியாது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசிய பிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன், மு.வீரபாண்டியன், அக்கட்சியின் நிர்வாகிகள் ஜி.பழனி சாமி, பெரியசாமி ஆகியோர் திமுக குழுவினருடன் பேசினர். வட சென்னை, நாகப்பட்டினம், தென்காசி, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் குறைந்தது 2 தொகுதிகள் வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ளது. ஆனால், ஒரு தொகுதி மட்டுமே தர முடியும் என திமுக கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்றிரவு மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. அக்கட்சி ஒரு தொகுதியை விரும்புவதாகவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பு கூறியதை அக்கட்சி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், 3 கட்சிகளுடனும் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x