Published : 26 Feb 2019 08:56 AM
Last Updated : 26 Feb 2019 08:56 AM
கமல்ஹாசன் பொது வாழ்விலும் வெற்றி பெற ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லவர் துணை நின்றால் நாற்பதும் எளிதே என்று கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று கூறியபோது, ‘‘கூட்டணி தொடர்பாக தேமுதிகவோ, இந்திய ஜனநாயக கட்சியோ இதுவரை எங்களை தொடர்பு கொள்ளவில்லை. சிலர் எங்களுடன் பேசிவருகின்றனர். அவர்கள் யார் என்பதை விரைவில் சொல்வோம்’’ என்றார்.
இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தனதுட்விட்டர் பதிவில், ‘கட்சி ஆரம்பித்து2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துதேர்தலில் முதல்முறையாக போட்டியிடப் போகும் மக்கள் நீதி மய்யம் தலைவர், என் நண்பர் கமல்ஹாசன் பொது வாழ்விலும் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள்’ என்று தெரிவித்திருந்தார்.
ரஜினிக்கு நன்றி
இதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,‘ரஜினிகாந்துக்கு நன்றி. என் 40 ஆண்டுகால நண்பரே, நல்லவர் துணை நின்றால் நாற்பதும் எளிதே, நாளை நமதே’ என்று பதிவிட்டுள்ளார்.
‘‘நல்லவர்கள் ஆதரவு அளித்தால் நாற்பதும் எளிதே என்று ட்விட்டரில் சொல்லியுள்ளீர்கள். ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா’’ என கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், ‘‘நல்லவர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அதனால்தான் அப்படி கூறினேன். அவர்கள் பெயரை இப்போது சொல்ல இயலாது’’ என்றார்.
விருப்ப மனு தாக்கல்
இதற்கிடையில், விருப்ப மனு தாக்கல் தொடர்பாக கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்கள் நீதி மய்யத்தின் விருப்பமனுவை கட்சியின் சென்னை, பொள்ளாச்சி தலைமை அலுவலகங்களில் 28-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். தனக்காகவோ, தகுதியான மற்றவருக்காகவே இதை தாக்கல் செய்யலாம். கட்சி உறுப்பினர் அல்லாதவர்கூட விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத் தொகை ரூ.10 ஆயிரம். மனுக்களை 7-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.
அதற்குப் பிறகு, கட்சியின் தேர்தல்குழு அறிவிக்கும் தேதியில் சென்னை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT