Published : 27 Feb 2019 11:24 AM
Last Updated : 27 Feb 2019 11:24 AM
அதிமுகவின் பலத்தோடு தென் மாவட்டங்களிலுள்ள 10 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக முழு முனைப்போடு செயல்பட தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பாஜக நேரடியாக தலைமை ஏற்காவிட்டாலும், அதிமுகவை முன்னிறுத்தி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி மதுரையிலிருந்துதான் முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தைத் தொடங்கினார்.
அதற்கு முன்னதாகவே காணொலிக் காட்சி மூலம் அனைத்து மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். திருப் பூருக்கும் வந்து சென்றார்.
வரும் மார்ச் 1-ல் கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத் என பலர் தமிழகத்தில் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டங்களை முடித்துள்ளனர். அமைச்சர் பியூஸ் கோயல் கூட்டணி விவகாரத்தை சாதுர்யமாக கவனித்து வருகிறார்.
பாஜக தமிழகத்தில் குறிப்பிடும்படியாக வளர்ந்துவிட்டது என்பதை அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில் பல மாதங்களாகவே அக்கட்சி திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறியது: தென் மாவட்டங்களில் முக் குலத்து சமுதாயத்தினரின் வாக்கு கள் கணிசமாக உள்ளன. இவை அதிமுகவுக்கே அதிக சாதகமானவை என்பது பொதுவான கணக்கு.
இந்த வாக்குகளை அடிப்படையாக வைத்து, தங்கள் பிரச்சாரம், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி தென் மாவட்டங்களிலுள்ள மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்ற திட்டமிட்டுள்ளோம்.
கன்னியாகுமரி ஏற்கெனவே எங்கள் கட்சி வென்ற தொகுதி. கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் 1.71 லட்சம், சிவகங்கையில் 1.32 லட்சம் வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. பாஜக கூட்டணிக் கட்சிகள் மதுரையில் 1.47 லட்சம், விருதுநகரில் 2.61 லட்சம், தேனியில் 1.34 லட்சம், திண்டுக்கல்லில் 93 ஆயிரம், தூத்துக்குடியில் 1.82 லட்சம், திருநெல்வேலியில் 1.27 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளன.
கன்னியாகுமரி தவிர இதர 9 தொகுதி களையும் சராசரியாக 1.50 லட்சத்துக்கும் மேலான வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அப்போது அதிமுக தனித்தே நின்றது. தற்போது டிடிவி தினகரன் அதிமுக வாக்குளைப் பிரித் தாலும், அதை எங்கள் கட்சி வாக்குகள், புதிதாக கிடைத்துள்ள வளர்ச்சியால் கூடுதல் வாக்குகளை வைத்து ஈடுகட்டி வெற்றி பெற்றுவிட முடியும் என உறுதியாக நம்புகிறோம்.
தென் மாவட்டத் தொகுதிகளில் காங்கிரஸ் கடந்த தேர்தலில் கன்னியாகுமரியில் 1.28 லட்சம், சிவகங்கையில் 1.03 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இதர 8 தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளையே பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை இதற்கும் கீழாகவே உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளைவிட தங்களுக்கே செல்வாக்கு அதிகம். மேலும் நடுத்தர, கட்சி சார்பற்ற மக்களின் ஆதரவு தங்களுக்கு நன்றாக உள்ளது. இதை தக்க வைக்கவே தென் மாவட்டங்களில் மோடி 3 முறை பிரச்சாரத்துக்கு வருவதும், அமித்ஷா பிரச்சாரம் செய்யும் வகையில் திட்டமிட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள், பொறுப்பாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பல கட்டமாகப் பயிற்சி அளித்துள்ளோம். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து வீடு,வீடாகச் சென்று பயனாளிகளிடம் பிரச்சாரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மானியத்தில் வீடு, எரிவாயு, காப்பீடுத் திட்டம் என பயனடைந்தவர்களை தேடிச் சென்று எங்கள் கட்சித் தொண்டர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இது எங்கள் கூட்டணிக்குக் கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பதால், 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT