Published : 26 Feb 2019 11:21 AM
Last Updated : 26 Feb 2019 11:21 AM

டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட அமமுக நிர்வாகிகள் விருப்பம்

அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என, நிர்வாகிகள் விரும்புவதாக, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து, 'தி இந்து' நாளிதழுக்காகப் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை" எனத் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினராக இருந்தபோது, 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 2008-ல் தொகுதி மறுசீரமைப்பில், தேனி தொகுதி உருவாக்கப்பட்ட நிலையில், பெரியகுளம் தொகுதி நீக்கப்பட்டது. அதன்பிறகு 2004 நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரோன் ரஷீத்தை விட 21,155 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அதிமுகவின் கோட்டையாகத் திகழும் பெரியகுளம் தொகுதியில், 2008-க்கு முன்னர் அக்கட்சி 7 முறை வென்றுள்ளது. திமுக அத்தொகுதியில் 1996-ம் ஆண்டு தான் கடைசியாக வென்றது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.பார்த்திபன் 5.71 லட்சம் வாக்குகள் பெற்று பெரும் வெற்றியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 2.56 லட்சம் வாக்குகள் பெற்றார். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தேனியில் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 5.70 லட்சம் வாக்குகளை அதிமுக பெற்றது. அதாவது, வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை சட்டப்பேரவை தேர்தலிலும் பெற்றுள்ளது.

ஆனால், வாக்கு சதவீதம் அடிப்படையில் பார்த்தால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 53% வாக்குகளை பெற்றது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் 49.4% வாக்குகளை மட்டுமே அதிமுக பெற்றது.

முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகம் உள்ள தேனி தொகுதி, பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம் வாக்காளர்களையும் கணிசமாகக் கொண்டுள்ளது. பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். மொத்தம் 15.32 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், 7.73 லட்சம் பெண் வாக்காளர்களும், 7.59 ஆண் வாக்காளர்களும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x