Published : 24 Feb 2019 09:22 AM
Last Updated : 24 Feb 2019 09:22 AM
பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், மற்ற 4 தொகுதிகள் என்னென்ன, யார் வேட்பாளர்கள் என்ற ஆலோசனை தீவிரமாக நடந்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜகவுக்கு 5 தொகுதிகள், என்.ஆர்.காங்கிரஸுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் என்.ஆர்.காங்கிரஸுக்கு புதுச்சேரி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவு செய்யப்படவில்லை.
பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் கன்னியாகுமரி, கோவை கிடைப்பது உறுதியாகியுள்ளது. மற்ற 3 தொகுதிகள் எவை என்பது முடிவு செய்யப்படவில்லை. கன்னியாகுமரி, கோவை தவிர, திருப்பூர், தென் சென்னை, திருச்சி அல்லது திருநெல்வேலி தொகுதியை பாஜக கேட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி, நீலகிரியை தர அதிமுக தயாராக உள்ளது.
தொகுதிகள் என்ன என்பதே முடிவாகாத நிலையிலும், வேட்பாளர்கள் யார் என்றவிவாதம் தமிழக பாஜகவில் தொடங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழக அமைச்சர் என்பதால் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் கன்னியாகுமரியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 1991 முதல் இதே தொகுதியில் போட்டியிட்டு வரும் அவர் 1999 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றார். 2014-ல் பாஜக – தேமுதிக – பாமக – மதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்று மத்திய இணை அமைச்சரானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே அவர் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்.
இதற்கிடையில், கன்னியாகுமரி தவிர மற்றதொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்ற குரலும் பாஜகவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன் 2 முறை கோவை எம்.பி.யாக இருந்தவர். 2006-க்கு பிறகு, கட்சிப் பணிகளில் இருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்தவர் கடந்த 2014 தேர்தலுக்கு முன்பாக கட்சிப் பணிகளுக்கு திரும்பி, கோவையில் மீண்டும் போட்டியிட்டார். கட்சியினரின் கடும் எதிர்ப்பை மீறி போட்டியிட்ட அவரால் வெல்ல முடியவில்லை. ஆனால், தற்போதும் போட்டியிட தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அதேநேரம், கோவையில் புதுமுகம் ஒருவரை நிறுத்த பாஜகவில் ஒரு பிரிவினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னையில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவதால், தமிழிசையை அங்கு போட்டியிட வைக்க அதிமுக விரும்புகிறது. தமிழிசை ஏற்பாரா என்பது தெரியவில்லை.
சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசிவந்த தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுவதில் அதிமுகவுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. ஆனாலும், தென்சென்னை அல்லது திருச்சியில் போட்டியிடுவது அவரது விருப்பமாக இருக்கிறது.
அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், நெல்லையில் போட்டியிட விரும்புகிறார். மாநிலப் பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் போட்டியிட விரும்புகின்றனர்.
என்னென்ன தொகுதிகள்.. யார் யார் வேட்பாளர்கள்.. பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் அனல்பறக்க நடந்துகொண்டிருக்க, ‘40 தொகுதிகளிலும் பிரதமர் மோடியே போட்டியிடுவதாக நினைத்து பணியாற்றுவோம்’ என்கின்றனர் பாஜகவினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT