Published : 27 Feb 2019 11:16 AM
Last Updated : 27 Feb 2019 11:16 AM
கூட்டணியில் மதுரை தொகுதி யாருக்கென்று இன்னும் முடிவாகாத நிலையில் பாஜவினர், மாநகராட்சி பகுதிகளில் தங்கள் கட்சி சின்னத்தை சுவர்களில் வரைந்து வருவதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இணைந்த கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. குறிப்பாக மதுரை மக்களவைத்தொகுதி அதிமுவுக்கா? பாஜகவுக்கா? என்பது தற்போது வரை தெரியவில்லை. ஆனால், அதற்குள் மதுரை மக்களவைத் தொகுதியில் ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக கட்சியினர் தேர்தல் பணிக்கு ‘பூத்’ கமிட்டி அமைப்பது, சட்டப்பேரவை வாரியாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்துவது என்று எதிரெதிர் அணியில் இருப்பதுபோல் போட்டிபோட்டு தேர்தல் ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், பாஜகவினர் ஒருபடி மேலே சென்று மாநகராட்சிப் பகுதியில் வேட்பாளர் பெயரை மட்டும் எழுதுவதற்கு இடம் விட்டு தங்கள் கட்சியின் தாமரைச் சின்னத்தை சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். அதில், `நமது சின்னம் தாமரை, 2019 எம்பி தேர்தல்' என்று குறிப்பிட்டுள்ளனர். இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்ப டுத்தி உள்ளது.
பாஜகவின் கணக்குமதுரைக்கு ‘எய்ம்ஸ்’, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற பல ஆயிரம் கோடியிலான மத்திய அரசின் பங்களிப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால், அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியுடன் இந்தத் திட்டங்களைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் மதுரையில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்று பாஜகவினர் கணக்குப் போடுகின்றனர்.
மேலும், கடைசி இரண்டு மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் இங்கு வெற்றிபெற்றுள்ளன. அதற்கு முன் வரை தேசிய கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதனால், அதிமுக கூட்டணியில் மதுரையை பாஜகவினர் கேட்டு வருகின்றனர். ஆனால், அதிமுகவோ மதுரைக்குப் பதிலாக திருச்சியைத் தருவதாகச் சொல்கிறது.
மதுரை தொகுதியை விட்டுக் கொடுப்பதா? வைத்துக் கொள்வதா? என்ற குழப்பத்தில் அதிமுக மேலிடம் இருப்பதால் கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதிகள் எண்ணிக்கை உறுதி செய்தாலும், அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது முடிவாகாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணிக்கு தலைமை பிரச்சினைஏற்கெனவே, தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை ஏற்பது பாஜகதான் என்று அவர்கள் சொன்னதாக வந்த தகவலால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்தனர். அதன்பிறகு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் உள்ள கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை, அந்தக் கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது, தேசிய அளவிலான கூட்டணிக்கு மட்டுமே பாஜக தலைமை வகிப்பதாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னதால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
தற்போது மதுரையில் பாஜகவினர் செய்துள்ள தேர்தல் சுவர் விளம்பரம் கூட்டணிக்குள் மீண்டும் விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்பும், இரு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் போய்விடவும் வாய்ப்புள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பாஜக கட்டுப்பாட்டில் அதிமுகவா?இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஜெயலலிதா இருந்திருந்தால் தொகுதி முடிவாகும் முன்பே இதுபோல் கூட்டணிக்குள் இருக்கும் ஒரு கட்சி, சுவர் விளம்பரம் செய்ய முடியுமா? செய்துவிட்டுத்தான் அவர்கள் கூட்டணியில் நீடிக்க முடியுமா? ஆனால், இப்போது பாஜகவினரால் முடிகிறது என்றால் எதிர்க்கட்சியினர் கூறுவதுபோல் பாஜகவினர் கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது, ’’ என்றனர்.
இது குறித்து பாஜகவினர் கூறுகையில், ‘‘மதுரை தொகுதி பாஜகவுக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுவர் விளம்பரம் செய்து வருகிறோம். கிடைத்தால் சுவர் விளம்பரத்தை வைத்துக் கொள்வோம். கிடைக்காவிட்டால் அழித்துவிடுவோம்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT