Last Updated : 27 Feb, 2019 10:21 AM

 

Published : 27 Feb 2019 10:21 AM
Last Updated : 27 Feb 2019 10:21 AM

‘ஒரு சீட் விட்டுக்கொடுங்கள்’: தேமுதிகவுக்காக காங்கிரஸிடம் திமுக சிபாரிசு

தேமுதிகவை கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியாக காங்கிரஸிடம் ஒரு சீட் விட்டுத்தர திமுக  கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரவிருக்கும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள திமுக கூட்டணியில் இணைய தேமுதிக ஒருவேளை இசைவு தெரிவித்தால் தனக்கு ஒதுக்கப்பட்ட 10 சீட்டில் ஒன்றை விட்டுத்தர இயலுமா என்று காங்கிரஸுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது திமுக.

தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க கடந்த சில நாட்களாகவே அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில்தான், தேமுதிகவை கூட்டணியில் இணைக்கும் முயற்சியாக ஒரு சீட்டை விட்டுத்தர காங்கிரஸிடம் கோரிக்கை வைத்துள்ளது திமுக.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஒருவர் கூறும்போது, "சில நாட்களுக்கு முன்னதாக மாநிலங்களை எம்.பி. கனிமொழி வாயிலாக திமுக தலைமையிடம் எங்களிடம் இந்த யோசனையை தெரிவித்தது. நாங்களும் இதுதொடர்பாக டெல்லி மேலிடத்துக்கு சொல்லியிருக்கிறோம்" என்றார்.

அதேபோல் திமுக தரப்பில் பேசிய மூத்த தலைவர் ஒருவர், "கடந்த வாரம் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்த பின்னர் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏதும் முடிவாகவில்லை" என்றார்.

விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை..

பேச்சுவார்த்தை ஒருபுறம் தொடர, தேமுதிகவுக்காக காங்கிரஸ் தலைமை ஒரு சீட்டை விட்டுத்தர வாய்ப்பில்லை என்றே காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர் கூறுகிறார். ஏனெனில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 9 இடங்களே போதாது என்றுதான் கட்சி மேலிடம் கருதுகிறதாம். 9 தொகுதிகளில் போட்டியிடவே தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டா போட்டி நிலவுகிறதாம். இதனால் 9-லும் ஒன்றை விட்டுத்தர காங்கிரஸ் விரும்பாது என்றே அவர் கூறுகிறார்.

எங்களுக்குத் தெரியாது:

சரி, தேமுதிக எத்தனை தொகுதிகளைத்தான் கேட்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா என்ற கேள்விக்கு, காங்கிரஸின் அந்த மூத்த நிர்வாகி "இது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. காங்கிரஸ் தலைமை இவ்விஷயத்தில் இருளில்தான் இருக்கிறது என்று சொல்லவேண்டும். மேலும், காங்கிரஸ் மேலிடம் இன்னும் தமிழகத்தின் பக்கம் தன் முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கவில்லை. ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கே.சி.வேணுகோபாலுடன் ராகுல் காந்தி குஜராத் பயணத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். முகுல் வாஸ்னிக், அகமது படேல் ஆகியோர் குஜராத்தில் நடைபெறவுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x