Published : 27 Feb 2019 09:15 AM
Last Updated : 27 Feb 2019 09:15 AM
மக்களவைத் தேர்தலில் ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து ஒன்றாக பணிபுரிய வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி நடத்தி வருகிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துவிட்டார்.
இப்போதைக்கு 40 தொகுதிகளிலும் போட்டி என்ற நிலைப்பாட்டுடன் பணிபுரிந்து வருகிறார். மேலும், சில அரசியல் தலைவர்களை சந்தித்தும் தனது கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவையொட்டி, ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் கமலுக்கு வாழ்த்த்துத் தெரிவித்தார். அதில் “கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் "நன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே, நாளை நமதே." என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளரும், நடிகருமான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி, கமல் இருவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவரும் ஒன்றாக இணையவேண்டும் என விரும்புகிறேன். நடிகர் சங்கத்தின் நிகழ்சிக்காக அல்ல. நட்சத்திர விழா வரவேற்பு நிகழ்ச்சிக்காக அல்ல. சினிமா விழாக்களுக்காக அல்ல.
எந்த விஷயத்துகாகவும் அல்லாமல், மக்களவைத் தேர்தலுக்காக ஒன்று சேருங்கள். ஆமாம். நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார். இக்கருத்தால் தமிழக அரசியல் களத்தில் இருவரும் இணைந்து பணிபுரிவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT