Published : 23 Feb 2019 11:46 AM
Last Updated : 23 Feb 2019 11:46 AM
தமிழகத்தின் இரண்டு முக்கியக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் மக்களவைத் தேர்தலுக்காக தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் களம் காணக் காத்திருக்கின்றன.
பிளவுபட்ட அதிமுகவால் தென் தமிழகத்தின் தேனி தொகுதி யாருக்கு என்ற கேள்வி எழுகிறது. தேனி மாவட்டத்தில் ஆரம்பத்தில் பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது. 2008-ல்தான் தேனி தொகுதி உதயமானது. அதற்கு முன்பு 2004 வரை 15 தேர்தல்கள் நடந்துள்ளன. அவற்றில் அதிமுக 7 முறையும் காங்கிரஸ் 4 முறையும் வெற்றி வாகை சூடின. திமுக இரண்டு தடவை வெற்றி பெற்றது. சுதந்திரா கட்சியும் சுயேட்சையும் தலா ஒரு முறை வென்றன. 2009-ல் காங்கிரஸ் வேட்பாளர் ஆரூனும் 2014-ல் அதிமுக வேட்பாளர் ஆர்.பார்த்திபனும் வெற்றி பெற்றிருந்தனர். இதன்மூலம் தேனி தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருப்பது தெரியவருகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தேனியில் அதிமுக வலிமையானதாகவும் ஒற்றுமையாகவும் இருந்தது. ஆனால் இன்று நிலை அப்படியில்லை. தினகரனின் அமமுக அதிமுகவின் போட்டியாளர் அல்ல என்று ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் தொடர்ந்து கூறிவந்தாலும், கள நிலவரம் அப்படி இல்லை. அமமுக நிர்வாகிகளுக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கைப் புறக்கணித்து விடமுடியாது.
கடந்த முறைகூட டிடிவி தினகரன் தொகுதிக்கு வந்தபோது, ஏராளமான மக்கள் அவரைச் சந்தித்தனர். கோயில்களைப் புதுப்பிக்க நிதியைத் தாராளமாக வழங்கினார் தினகரன்.
முக்குலத்தோர் வாக்கு வங்கி இங்கு அதிகமாக உள்ளது. தேனியில் தலித்துகளும் உத்தமபாளையத்தில் முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர். பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிறிய அளவில் உள்ளனர்.
விவசாயமும் சுற்றுலாத் துறையும் இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. நியூட்ரினோ திட்டமும் முல்லைப் பெரியாறு பிரச்சினையும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. தொகுதி மக்களுக்கு அதிமுக பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யார் வேட்பாளர்கள்?
அதிமுக சார்பில் 60 பேர் இதுவரை வேட்பு மனுக்களை அளித்துள்ளனர். அதில் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் முதலிடத்தில் உள்ளார். தினகரனின் ஆசியோடு ரஃபீக் என்பவர் அமமுக சார்பில் போட்டியிடுவார் எனத் தகவல் கசிந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தேனி ஒதுக்கப்பட்டால், ஆரூனின் மகன் வேட்பாளராக இருப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT