Published : 07 Apr 2019 03:45 PM
Last Updated : 07 Apr 2019 03:45 PM
கேரளாவை பொறுத்தவரையில் மாறி மாறி கட்சிகளை தேர்வு செய்வதையே மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமன்றி மக்களவை தேர்தலிலும் அவர்களது தேர்வு மாறி மாறி அமைந்துள்ளதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. தேசிய அளவில் எதிரொலிக்கும் அரசியலை பற்றி கேரள மக்கள் கவலைப்படுவதில்லை. உள்ளூர் பிரச்சினைகள், கேரள அரசியலை மையப்படுத்தியே அவர்கள் வாக்களிக்கின்றனர்.
சிறுபான்மையினரின் வாக்குகள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தின் தென் பகுதியில் கிறிஸ்தவர்கள் வாக்குகளும், வடக்கு பகுதியில் முஸ்லிம்களின் வாக்குகளும் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை ஓரளவு தீர்மானிக்கின்றன.
இருதுருவ அரசியல் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் கேரளாவில் தேசியக்கட்சிகளுக்கு மட்டுமே இடம் உள்ளது. இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் நேரடியாக மோதும் இந்த மாநிலத்தில் இரு அணிகளுக்கும் வலிமையான வாக்கு வங்கி உண்டு.
எனினும் கடந்த 2 தேர்தல்களாக பாஜகவின் வாக்கு வங்கி சற்று அதிகரித்து வருகிறது. சிறு சிறு கட்சிகளுடன் இணைந்து பாஜக 2014-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்தது. கடந்த தேர்தலில் மோடி அலை வீசியபோதிலும, கேரளாவில் எந்த தொகுதியிலும் பாஜக வெற்றி பெறவில்லை. இருப்பினும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் அக்கட்சி இரண்டாம் இடம் பிடித்து இடதுசாரி கட்சிகளை பின்னுக்கு தள்ளியது.
2014- மக்களவை தேர்தல், கேரளா
கட்சி | தொகுதிகள் (20) | வாக்கு சதவீதம் |
காங்கிரஸ் கூட்டணி | ||
காங்கிரஸ் | 8 | 31.10 |
முஸ்லிம் லீக் | 2 | 4.50 |
கேரளா காங்கிரஸ் | 1 | 2.40 |
புரட்சிகர சோசலிஸ்ட் | 1 | 2 |
இடதுசாரி கூட்டணி | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 5 | 21.60 |
இந்திய கம்யூனிஸ்ட் | 1 | 7.60 |
சுயேச்சைகள் | 2 |
|
பாஜக | 0 | 10.30 |
கடந்த தேர்தலில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. பல தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி மாறிபோனது. திருவனந்தபுரம் தொகுதியில் 15,470 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோற்றது பாஜக.
மக்களவை தேர்தலுக்கு பிறகு 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.
கடந்த ஆண்டு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் வரும் மக்களவை தேர்தலில் இது முக்கிய தேர்தல் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் அம்மாநிலத்தையே உலுக்கி வருகிறது.
இந்த போராட்டத்தை முன்னெடுத்து பாஜக முன்னெடுத்து வருவதால் இந்த தேர்தலில் இதுவும் முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
கேரள அரசியலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்குள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இது, கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியை எதிர்த்து பலமான வேட்பாளராக பாரத் தர்ம ஜனசேனா தலைவர் துஷார் வெள்ளப் பள்ளியை, பாஜக களமிறக்கியுள்ளது. கேரள தேர்தல் களத்தில் ராகுல் இருப்பது இடதுசாரிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
2009- மக்களவை தேர்தல், கேரளா
கட்சி | தொகுதிகள் (28) | வாக்கு சதவீதம் |
காங்கிரஸ் கூட்டணி | ||
காங்கிரஸ் | 13 | 40.13 |
முஸ்லிம் லீக் | 2 | 5.07 |
கேரளா காங்கிரஸ் | 1 | 2.53 |
இடதுசாரி கூட்டணி | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 4 | 30.48 |
இந்திய கம்யூனிஸ்ட் | 0 | 7.44 |
சுயேச்சைகள் | 2 | |
பாஜக | 0 | 6.31 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT