Published : 19 Mar 2019 08:03 AM
Last Updated : 19 Mar 2019 08:03 AM
தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க சி-விஜில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, புகார் நடவடிக்கை பொறுப்பு அதிகாரிகளுக்கு மற்றும் பறக்கும் படையினருக்கு என மொத்தம் 4 செயலிகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இதில், பொதுமக்களுக்கானது மட்டுமே ஆன்ட்ராய்ட் வகை கைப்பேசிகளில் உள்ள பிளே ஸ்டோரில் கிடைக்கும். மற்ற செயலிகளை மத்திய தேர்தல் ஆணையமே சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக இமெயிலில் வழங்குகிறது. இந்த நான்கு செயலிகளும் கடந்த மார்ச் 10 முதல் செயல்பாட்டில் உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரம் கூறும்போது, “நேற்று வரை சி-விஜிலில் வந்த 6094 புகார்களில் 1,823 மட்டுமே முறையானவை. அதிகப் புகார்களாக ஆந்திரா 18, மேற்கு வங்கம் 12, தமிழகம் 6 சதவீதங்களில் வந்துள்ளன. இதை வைத்து அம்மூன்றில் மட்டும் புகார் அதிகம் எனக் கூற முடியாது. இதற்கு பொதுமக்கள் இடையே செயலி மீதான விழிப்புணர்வு ஏற்படாததும் காரணம். வேறுபணியில் உள்ள பறக்கும் படைக்கு வரும் உத்தரவை அது ஏற்க முடியாது எனக்கூறமுடியும். ஆனால், புகாரை ஏற்கும் படையினர் அடுத்த 15 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு செல்வது அவசியம் என்பதால் நூறு நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடுகிறது” எனத் தெரிவித்தன.
சி-விஜிலில் பணம் பட்டுவாடா, விதிகளை மீறி சுவரொட்டிகள் போன்ற புகார்கள் அதிகம் வருகின்றன. விதி மீறல் நடைபெறும் நூறு மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள பறக்கும் படையினருக்கு தெரியும் வகையில் செயலி இயங்குகிறது. இதனால், புகாரை பெறும் மாவட்டக் கண்காணிப்பாளர் அதை, அச்சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள பறக்கும்படையினருக்கு உத்தரவாக அனுப்புவார். இதை ஏற்று நேரில் செல்லும் பறக்கும் படையினர் புகார் மீது ஐந்து முதல் நூறு நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுத்து அதற்கு ஆதாரமான படத்தையும் செயலியில் பதிவேற்றம் செய்கிறார்கள்.
இதை கண்காணிப்பாளர், புகார் அளித்தவருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலாக செயலி அனுப்பி விடுகிறது. இதை மாநில தேர்தல் ஆணையர் தனது செயலியில் கண்காணித்து வருவார். அனைத்து மாநிலங்களில் எல்லா செயலிகளின் நடவடிக்கைகளையும் மத்திய தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக் குழு தன் டெல்லி தலைமையகத்தில் அமர்ந்தபடி கண்காணிக்கிறது. இதனால், செயலிகள் மூலம்அளிக்கப்படும் முறையானப் புகார்களில் தவறுகள் நடப்பதில்லை.
அனைத்து செயலிகளும் இயங்க, புகார் அளிப்பவர், நடவடிக்கை எடுப்பவர்கள் என அனைவருமே தன் இருப்பிடம் அறியும் ஜிபிஎஸ் கருவியை ஆன் செய்து வைப்பது அவசியம். இதை ஆன் செய்து வைக்கவில்லை எனில் செயலி செயல்படாமல் முடங் கிய நிலையில் இருக்கும். ஏற்கெனவே எடுத்து வைத்த படங்களையும், கம்ப்யூட்டர்களின் திரைகளில் எடுக்கப்படுவதை புகாராக செயலி மூலம் அனுப்புவது முறையற்ற புகாராகக் கருதப்படும்.
மேலும், இந்த சி-விஜில் செயலி குறித்து அறியாமல் பலரும் தங்கள் ட்விட்டர் அல்லது முகநூல் வழியாகப் தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாகவும், தங்கள் மாநில அதிகாரிக்கும் புகாராக அளித்து வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு மாநிலம் மற்றும் மத்திய தேர்தல் ஆணையம், செயலி மூலம்புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி வருகிறது. இதற்கு செயலி மூலம் புகார் அளிப்பவர்கள் ட்விட்டர், முகநூல் போன்று தங்கள் அடையாளத்தை மறைக்க முடியாமல் இருப்பது காரணம் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT