Published : 22 Mar 2019 07:54 AM
Last Updated : 22 Mar 2019 07:54 AM
போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு அளிப்பதாக தேர்தல் ஆணையத்திடம் சமூகவலைதளங்கள் உறுதி அளித்துள்ளன.
துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் யூடியூப் மற்றும் கூகுள் சார்பில் பியூஷ் போதார், ட்விட்டர் சார்பில் மஹிமா கவுல், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் சார்பில் ஷிவ்நாத் தாக்கூர், ஷேர்சாட் சார்பில் வர்கீஸ் மல்லு, பிகோ டிவியில் ஒரு மலேசிய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இவை அனைத்தும் சர்வதேச வலைதளங்கள் என்பதால் பொதுவான விதிமுறைகள் அறிமுகப்படுத்த முடியாது என அவர்கள் கூறி உள்ளனர். இந்தியாவின் மக்களவை தேர்தலுக்காக அந்நாட்டில் மட்டும்சில கட்டுப்பாடுகளை விதித்துஒத்துழைப்பதாகவும் சமூக வலைதளங்கள் உறுதி அளித்துள்ளன.
வேட்பாளர்கள் வெளியிடும் விளம்பரங்களை கண்காணித்து அவர்களின் பிரச்சாரச் செலவுப்பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களுக்காக செலவு செய்பவரின் பெயரும் குறிப்பிடப்படுவது அவசியம். இப்பணிக்காக ஆணையத்தால் அமர்த்தப்பட்ட ஊடக விளம்பரச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி பெறாத விளம்பரங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிடக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனினும், ஆணையத்தின் புகார்களை இமெயில் மூலம் பெற கூகுள்மட்டுமே ஒத்துக் கொண்டிருக்கிறது. மற்றவை அதன் வலைதளங்கள் மூலமாக புகார் அளிக்க வேண்டும் என ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளன. போலிக் கணக்காளர்களே அதிகமான விதி மீறல்களில் ஈடுபடுவதால் அவற்றை நீக்க வேண்டும் என்ற ஆணையத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, ‘‘எங்கள் விதிமுறைகளை ஏற்க மறுத்தவர்கள் தாம் பேசிக் கொண்டு வந்த சில கட்டுப்பாடுகளை மட்டும் பின்பற்றுவதாக உறுதி அளித்துள்ளனர். விதிமீறல்களை ஆணையம் தானாக முன்வந்து கண்டுபிடித்து புகார் அளிக்க வேண்டுமே தவிர அவற்றை பிடிக்க நிறுவனங்கள் உதவாது எனக் கூறி விட்டனர். அதிக உறுப்பினர்களால் கிடைக்கும் முக்கிய வருமானம் காரணமாக, போலிக் கணக்குகள் மீது மட்டும் எவரும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை’’ எனத் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT