Published : 07 Mar 2019 09:58 PM
Last Updated : 07 Mar 2019 09:58 PM
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. குஜராத், உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏப்ரல், மே மாதம் 2-ம் வாரம் வரை மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது.
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். அநேகமாக இந்த வார இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமைக்கு முன்பாக மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
17-வது மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை 7 அல்லது 8 கட்டங்களாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இருக்க வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெறும் எனத் தெரிகிறது.
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும், 10 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. குஜராத், உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.
குஜராத்தில் அஹமதாபாத் மேற்கு தொகுதியில் ராஜு பர்மார், ஆனந்த் தொகுதியில் பாரத்சிங் சோலாங்கி, வதோதரா தொகுதியில் பிரசாந்த் பாட்டீல், சோட்டா உதய்பூர் தொகுதியில் ரஞ்சித் மோகன்சிங் ரத்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். ஃபருக்காபாத் தொகுதியில் சல்மான் குர்ஷித் போட்டியிடுகிறார்.
ஷஹரன்பூர் தொகுதியில் இம்ரான் மசூத், பதாவுன் தொகுதியில் சலீம் இக்பால் ஷெர்வானி, தவ்ராஹா தொகுதியில் ஜித்தின் பிரசாத், உன்னாவு தொகுதியில் அன்னூ தாண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அக்பர்பூர் தொகுதியில் ராஜாராம் பால், ஜலால்வுன் தொகுதியில் பிரிஜ் லால் காப்ரி, பைசாபாத் தொகுதியில் நிர்மல் காத்ரி, குஷி நகர் தொகுதியில் ஆர்.பி.என்.சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குஜராத்தில் 4 தொகுதிகளுக்கும், உ.பி.யில் 11 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர்களின் பெயரில் பிரியங்கா காந்தியின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT